Last Updated : 25 Dec, 2015 10:30 AM

 

Published : 25 Dec 2015 10:30 AM
Last Updated : 25 Dec 2015 10:30 AM

இன்று வாஜ்பாய் 91-வது பிறந்த தினம்: மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்படும் இந்தியாவின் மூத்த தலைவர்

அரசியல் வரலாற்றில் முதல் முறையாக காங் கிரஸ் அல்லாத அரசை 5 ஆண்டுகள் முழுமையாக வழிநடத்திய பெருமைக்குரியவர் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்.

1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த வாஜ்பாயின் வாழ்க்கை சுவடுகள் ஒவ்வொன்றும் இந்தி யாவின் சரித்திரமாகும்.

மற்ற பாஜக தலைவர்களைப் போல வாஜ்பாயும் ஆர்எஸ்எஸ் மூலமே அரசியலில் அடியெடுத்து வைத்தார். 1951-ல் நேருவின் அமைச் சரவையில் அமைச்சராக இருந்த சியாம பிரசாத் முகர்ஜியும், ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியர் தீனதயாள் உபாத்தியாயாவும் 'பாரதிய ஜன சங்கம்' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினர்.

அவர்களுக்கு துணையாக வாஜ்பாய், அத்வானி ஆகியோரை அக்கட்சிக்கு அனுப்பி வைத்தார் அன்றைய ஆர்எஸ்எஸ் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர். அப்போது வாஜ்பாய் ஆர்எஸ்எஸ்ஸின் இந்தி வார இதழான 'பாஞ்சஜன்ய'வின் ஆசிரியாக இருந்தார்.

தனது பேச்சாற்றல், அமைப் புத் திறன், போராடும் குணம், நகைச்சுவை உணர்வு ஆகியவற் றால் சில ஆண்டுகளிலேயே அக்கட்சியில் முக்கியத் தலைவராக உயர்ந்தார். 1957 முதல் 10 முறை மக்களவை, 2 முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். இந்திரா காந்தி ஆட்சியில் நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது அதை எதிர்த்ததால் சிறையில் அடைக்கப்பட்டார்.

1977-ல் மொரார்ஜி தேசாய் தலைமையில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்த போது வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சரானார். ஐ.நா. சபை யிலும். பல்வேறு வெளிநாடுகளில் அவர் ஆற்றிய பணிகள் இந்தியா வுக்கு பெருமையைத் தேடித்தந்தன.

1977-ல் ஜனதா கட்சிக்குள் கரைந்த பாரதிய ஜனசங்கம் 1980-ல் பாரதிய ஜனதா கட்சியாக (பாஜக) அவதாரம் எடுத்தது. அதன் முதல் தலைவராகப் பொறுப் பேற்ற வாஜ்பாய் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அதன் விளைவாக காங்கிரஸுக்கு மாற்றாக பாஜக வளரத் தொடங்கியது.

1996-ல் முதல் முறையாக பிரதமரான வாஜ்பாய் 13 நாட்களில் பதவியை இழந்தார். ஆர்எஸ்எஸ், பாஜகவை கடுமையாக விமர்சிப்ப வர்கள் கூட வாஜ்பாயை ஏற்றுக் கொண்டார்கள். கொண்டாடவும் செய்தார்கள். 'சேற்றில் மலர்ந்த செந்தாமரை', 'தவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர்' என்றெல்லாம் எதிர்க்கட்சித் தலை வர்கள் அவரை பாராட்டினர்.

இதனால் 1998, 1999 தேர்தல் களில் பாஜகவை ஏற்காதவர்கள் கூட அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தனர். 1998-ல் அதிமுகவும், 1999-ல் திமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 1999-ல் அதிமுக ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் 13 மாதங்களில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. 1999-ம் ஆண்டு தேர் தலில் திமுக உள்ளிட்ட 23 கட்சி கள் துணையுடன் வெற்றி பெற்று மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசை 5 ஆண்டுகள் வழி நடத்தி னார்.

1998 மே 11, 13 தேதிகளில் பொக் ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனை இந்தியாவை உலக நாடுகள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத் துடன் பார்க்க வைத்ததோடு, வாஜ்பாயை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 1999 மே முதல் ஜூலை வரை கார்கில் எல்லையில் பாகிஸ்தானுடன் நடை பெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றாலும், ஊடுருவலை தடுக்க முடியவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது.

அமைதி நடவடிக்கை

பாகிஸ்தானுக்கு பேருந்து போக்குவரத்து, அமைதி பேச்சு வார்த்தை என தனது ஆட்சிக் காலத்தில் நல்லுறவுக்கு பல்வேறு அமைதி நடவடிக்கைகளை வாஜ் பாய் எடுத்தார்.

ஆனாலும், காந்தகார் விமான கடத்தல், தீவிரவாதிகள் விடுதலை, நாடாளுமன்ற வளாகத்தில் தீவிர வாதிகள் தாக்குதல், குஜராத் இனக் கலவரம் உள்ளிட்டவை வாஜ்பாய் அரசுக்கு கரும்புள்ளியாக அமைந்தன.

வயது முதிர்ச்சியால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த 10 ஆண்டுகளாக அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கியிருக்கும் வாஜ்பாய் கிறிஸ்துமஸ் தினமான இன்று 91-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மாற்றுக் கட்சி யினரும் கொண்டாடும் வாஜ்பாய், இந்தியாவின் மாபெரும் தலைவர் களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.

மாற்று கருத்தை ஏற்ற பண்பாளர் டி.ராஜா

‘‘பாஜகவைச் சேர்ந்தவராக இருந்தாலும் வாஜ்பாய் மாறுபட்ட தலைவராக இருந்தார். அதற்கு உதாரணமாக பல சம்பவங்களைக் கூற முடியும். கடந்த 2002-ல் கோத்ரா இனக் கலவரம் நடைபெற்றபோது, பாஜக ஆட்சி நடந்த குஜராத் சென்ற வாஜ்பாய், 'யாராக இருந்தாலும் ராஜதர்மத்தைக் காப்பாற்ற வேண்டும்' என்றார்.

ஈராக்கிற்கு எதிராகப் போரிட அந்நாட்டுக்கு இந்தியப் படைகளை அனுப்ப வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள்விடுத்தது. அதனை பாஜக ஆதரித்தது. ஆனால், பிரதமராக இருந்த வாஜ்பாய் இடதுசாரி கட்சித் தலைவர்களை அழைத்து இது குறித்து ஆலோசனை நடத்தினார். மறுநாள் நாடாளுமன்றத்தில், 'ஜனநாயக நாடான இந்தியா ஈராக்கிற்கு எதிராக படைகளை அனுப்பாது' என அறிவித்தார். நாட்டு நலனுக்காக மாறுபட்ட கொள்கையுடைய கட்சிகளின் கருத்துகளையும் கேட்டறிந்த பண்பாளர். நகைச்சுவை உணர்வு கொண்டவர் வாஜ்பாய். நல்ல நட்புணர்வு கொண்டவரும் கூட. இடதுசாரி தலைவர்களை எங்கு பார்த்தாலும் 'வாங்க காம்ரேட்..' என சிரித்த முகத்துடன் அழைப்பார். எனக்கே அவருடன் பல இனிய அனுபவங்கள் உண்டு’’ என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் அகில இந்தியச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x