Published : 14 Apr 2021 12:32 PM
Last Updated : 14 Apr 2021 12:32 PM

மிக முக்கியமான அடுத்த 2 வாரங்கள்; மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

சென்னை

தற்போது மிக முக்கியமான அடுத்த இரண்டு வாரங்களை எதிர்கொள்ள இருக்கிறோம். அதற்குப் பொது மக்களாகிய உங்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவை என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை போரூரில் சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

''முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா சிகிச்சைக்கான படுக்கைகளை இன்னும் அதிகரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தற்போது 81,871 படுக்கைகள் களத்தில் உள்ளன. அதில் மருத்துவமனைகளில் 52,946 படுக்கைகளும், கோவிட் கேர் மையத்தில் 28,095 படுக்கைகளும் உள்ளன. 6,517 வென்டிலேட்டர்கள் கையிருப்பில் தயார் நிலையில் உள்ளன. அரசைப் பொறுத்தவரை 1,49,822 ரெம்டெசிவர் மருந்துகள் கையிருப்பில் உள்ளன. அதே நேரத்தில் சில தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவர் மருந்தைக் கோருகின்றனர்.

கோவிட் கேர் மையங்களுக்கு மக்கள் குறைவாகவே செல்கிறார்கள். யாருக்கெல்லாம் ஆக்சிஜன் வாயு தேவைப்படுவதில்லையோ, யாரெல்லாம் குறைவான கரோனா அறிகுறிகளுடன் உள்ளார்களோ அவர்கள் அனைவரும் கோவிட் கேர் மையங்களில், நல்ல சிகிச்சை பெறலாம். இதற்கான வசதிகளுடன் கோவிட் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

கரோனா சிகிச்சைக்குத் தேவையான அனைத்து முக்கியமான மருந்துகளையும் தேவையான அளவு கையிருப்பில் வைத்துள்ளோம். முகக்கவசம் அணியாத 2.39 லட்சம் மக்கள் மீது ரூ.5.07 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ரூ.9.74 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 40 லட்சத்து 99 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தேர்தல் இருந்ததால், அப்போது விழிப்புணர்வுப் பிரச்சாரம் எதுவும் செய்யாமல் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால், இன்று முதல் தமிழகம் முழுவதும் தடுப்பூசி திருவிழா தொடங்கியுள்ளது.

தற்போது மிக முக்கியமான அடுத்த இரண்டு வாரங்களை எதிர்கொள்ள இருக்கிறோம். அதற்குப் பொது மக்களாகிய உங்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவை. தொழில்கள் அனைத்தும் இயல்பாக உள்ளன என்ற எண்ணத்தில் பொதுமக்கள் இருக்க வேண்டாம். ஏனெனில் கரோனா தொற்று தமிழ்நாட்டில் மட்டும் உள்ள பிரச்சினை அல்ல. இந்தியாவில் தினம்தோறும் ஒரு லட்சத்து 85 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் தினமும் இதுவரை சுமார் 7 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இதனால் பொதுமக்கள் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளை மதித்து, முழுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். பொது இடங்களுக்குச் செல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கரோனா தடுப்புப் பணிகளில் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், காவல்துறை, சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து செயல்படுகின்றனர். போர்க்கால அடிப்படையில் அனைவரும் களப்பணியில் ஈடுபட்டுள்ளோம்''.

இவ்வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x