Published : 14 Apr 2021 03:14 AM
Last Updated : 14 Apr 2021 03:14 AM

அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள திமுக உரிய ஒத்துழைப்பு அளிக்கும்: புதிய தலைமை தேர்தல் ஆணையருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

சென்னை

சவால்களை எதிர்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு திமுக ஒத்துழைப்பு அளிக்கும் என்று அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்

புதிய தலைமை தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள சுஷில் சந்திராவுக்கு அவர் நேற்று அனுப்பிய வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக தாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாகவும், திமுக நாடாளுமன்றக் குழுவின் சார்பாகவும், எங்களது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

2019 மக்களவைத் தேர்தலிலும் சமீபத்தில் நடந்து முடிந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தாங்கள் ஆற்றிய அரும்பணிக்கு கிடைத்த வெற்றியே இந்த தலைமைப் பொறுப்பு.

தேர்தல்கள்தான் மக்களாட்சியின் உயிர் மூச்சு. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடான இந்தியாவில், கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் உறுதி செய்யும் உயரிய அமைப்பாக தேர்தல் ஆணையம் விளங்குகிறது.

சவால்கள் நிறைந்த பணி

ஆனாலும், சமீபகாலங்களில் பல்வேறு தடங்கல்கள் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு பணியாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தேர்தல் ஆணையம் தள்ளப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையராக தங்களின் கடமை மிகவும் சவால்கள் நிறைந்ததாக அமைந்துள்ளது. தங்களின் அனுபவம், கடமை உணர்வால் வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். அண்ணா, கருணாநிதி வழியில் 1949 முதல் மக்களாட்சியின் விழுமியங்களையும், மாண்பையும் உயர்த்திப் பிடிப்பதில் திமுக என்றுமே தனித்துவமாக விளங்கி வருகிறது.

எதிர்பாராத சவால்கள் முன்நிற்கும் இந்த காலக்கட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையராக தங்கள் கடமையை நிறைவேற்ற திமுக ஒத்துழைக்கும்.

இவ்வாறு டி.ஆர்.பாலு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x