Published : 04 Dec 2015 09:03 PM
Last Updated : 04 Dec 2015 09:03 PM

தனியார் மருத்துவமனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்ன?- தமிழக அரசு விளக்கம்

இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலை மற்றும் மியாட் மருத்துவமனையில் கூடுதலாக ஜெனரேட்டர் வசதி இல்லாததால் 14 சடலங்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ''மியாட் மருத்துவமனை 1000 படுக்கைகள் கொண்ட தனியார் மருத்துவமனையாகும். முதல்கட்ட விசாரணையில் மருத்துவமனை அளித்துள்ள தகவல்களின்படி, டிசம்பர் 1-ம் தேதி அன்று 575 உள்நோயளிகள் அங்கு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 300 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். 50 பேர் டிசம்பர் 1-ம் தேதியும், 250 பேர் டிசம்பர் 3ம் தேதியும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். மீதமுள்ள 275 நோயாளிகளில் 56 நோயாளிகள் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த 56 பேரும் மியாட் மருத்துவமனை நிர்வாகத்தால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு தங்களுடைய சொந்தப் பொறுப்பில் டிசம்பர் 3-ல் அனுப்பி வைக்கப்பட்டனர்.

டிசம்பர் 3-ம் தேதி மியாட் மருத்துவமனை நிர்வாகம், கடும் வெள்ளம் மற்றும் மின் இழப்பால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய நேயாளிகளுக்கு சுவாசம் அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர்கள் கேட்டு சென்னை மாநகராட்சி, மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தது.

சுகாதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை சென்னை அரசு பொது மருத்துவமனையில் இருந்து உடனடியாக அனுப்பி வைத்தனர். மேலும், மேற்படி மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளை வெளியேற்ற படகுகள் கேட்டு கோரிக்கை வைத்ததால்அரசு சுகாதாரச் செயலரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் டிசம்பர் 3-ம் தேதி அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பாதிப்பிலிருந்து தடுத்து உயிர் காக்கும் நடவடிக்கை எடுக்க அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்றனர்.

அங்கு சென்று ஆய்வு செய்தபோது, அந்த மருத்துவமனையின் ஜெனரேட்டர்கள் வெள்ளப் பெருக்கின் காரணமாக பழுதடைந்து செயலற்ற நிலையில் இருந்ததையும் அந்த மருத்துவமனையில் மாற்று ஜெனரேட்டர்கள் வேறு எதுவும் இல்லா நிலையும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் சுகாதாரத் துறை செயலாளரால் மேற்படி மருத்துவமனைக்கு ஏழு 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த நோயாளிகளை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், மியாட் மருத்துவமனையின் பிணவறையில் கடந்த சில நாட்களாக பல்வேறு நோய்களினால் உயிரிழந்த 14 சடலங்கள் இருப்பது சுகாதாரத் துறை செயலாளரால் அறியப்பட்டது. இந்த 14 சடலங்களும் கடும் மழை காரணமாக அவர்களது உறவினர்களால் எடுத்துச் செல்லப்படவில்லை என்பதும் அறியப்பட்டது.

நந்தம்பாக்கம் பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்ட காரணத்தாலும், மியாட் மருத்துவமனையில் ஜெனரேட்டர் மின்சாரம் இல்லாததாலும் பிணம் இருக்கும் இடங்களில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தும் மியாட் மருத்துவமனை நிர்வாகம் கூடுதலாக போதிய ஜெனரேட்டர் மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

மருத்துவமனையில் இருந்த சடலங்கள் சுகாதார கேட்டினை ஏற்படுத்தக் கூடும் என்ற காரணத்தால் மியாட் மருத்துவமனை எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்ததை அடுத்து அங்கிருந்த சடலங்கள் அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இதற்கிடையில் 140 உள் நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மியாட் மருத்துவமனையில் டிசம்பர் 4-ம் தேதியன்று 70 உள் நோயாளிகள் மட்டும் எஞ்சியிருந்தனர். எச்சரிக்கை நடவடிக்கைகளை கருத்தில் கொண்டும் நோயாளிகளின் நலன் கருதியும் நோயாளிகளை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க சுகாதாரத் துறை முன் வந்தது. இருப்பினும், தங்களுடைய மருத்துவமனையில் ஒரு தளத்தில் மட்டும் நோயாளிகளை வைத்து பராமரிக்க முடியும் என்று மியாட் மருத்துவமனை நிர்வாகம் கருதி அவர்களை தங்களது பொறுப்பில் வைத்துக் கொண்டது.

அரசு மருத்துவமனைகளின் நடைமுறைப்படி ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அங்கு கொண்டு வரப்பட்ட 14 சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி உயிரிழப்பிற்கான காரணத்தை அறிய வேண்டிய ஏற்பாடுகளை செய்தது.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 14 சடலங்கள் கொண்டு வரப்பட்ட தகவலை அறிந்த ஊடகங்கள், மியாட் மருத்துவமனையில் மின்சாரம் இல்லாத நிலையில் செயற்கை சுவாசக் கருவிகள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டு குறிப்பிட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளன.

இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலை மற்றும் மியாட் மருத்துவமனையில் கூடுதலாக ஜெனரேட்டர் வசதி இல்லாத நிலை ஆகிய சூழ்நிலையில், நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்படி தனியார் மருத்துவமனைக்கு அளித்ததுடன், மேற்படி தனியார் மருத்துவமனையில் இருந்த சடலங்கள் மூலம் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலும் அனைத்து உதவிகளையும் செய்துள்ளது.

இன்று டிசம்பர் 4-ம் தேதி அரசு மேற்படி தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் 70 உள் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு 250 ஜெனரேட்டரை அந்த மருத்துவமனைக்கு அளித்துள்ளது.

ஊடகங்கள் இந்த 14 உயிரிழப்புகளை மின் இழப்பு காரணமாக ஏற்பட்டது என்று மிகைப்படுத்தி வந்ததால் இந்த உண்மை நிலவரத்தை விளக்குகிறோம்'' என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x