Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

வரும் நிதியாண்டில் ரூ.40 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க இலக்கு: நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் செல்வராஜ் தகவல்

சென்னையில் உள்ள நபார்டு வங்கியின் மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், வங்கியின் நடப்பாண்டு திட்டங்கள் குறித்தும் கரோனா பரவல் காலத்திலும் வெற்றிகரமாக லாபம் ஈட்டியது குறித்தும் விளக்கம் அளிக்கிறார் தலைமை பொது மேலாளர் எஸ்.செல்வராஜ். உடன் பொது மேலாளர்கள் பைஜு என்.குருப், என்.நீரஜா உள்ளிட்டோர்.படம்: ம.பிரபு

சென்னை

நபார்டு வங்கி மூலம் 2020-21நிதியாண்டில் ரூ.27,104 கோடிகடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், வரும் ஆண்டில் ரூ.40 ஆயிரம்கோடி வரை கடனுதவி வழங்க தயாராக உள்ளதாகவும் நபார்டுவங்கியின் தலைமை பொது மேலாளர் செல்வராஜ் தெரிவித்தார்.

தேசிய மேலாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு) ஆண்டறிக்கையை (2020-21) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நபார்டு வங்கியின் தலைமை பொதுமேலாளர் செல்வராஜ் நேற்று வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நபார்டு வங்கி மூலம் 2020-21 நிதியாண்டில் ரூ.27,104 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 87 சதவீதம் அதிகம். கூட்டுறவு வங்கிகள் அதிகபட்சமாக 38 சதவீதம் வரை கடன் பெற்றுள்ளன. மேலும், வணிக வங்கிகள் 29 சதவீதம், கிராம வங்கிகள் 21 சதவீதம் மற்றும் தனியார் வங்கிகள் 12 சதவீதம் வரை கடன் வாங்கியுள்ளன.

வரும் 2021-22 நிதியாண்டில் ரூ.40 ஆயிரம் கோடி வரை கடனுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர குடிநீர், பாசனத் திட்டங்களுக்கு நபார்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு உதவி நிதி (நிடா) என்ற புதிய திட்டத்தின் மூலம் தமிழக அரசுக்கு ரூ.6,531 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டது.

மேலும், தமிழக அரசுக்கு பல்வேறு திட்டங்களுக்காக ரூ.31 கோடிஇலவச நிதியும் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு உறுதி

தமிழக அரசுக்கு இதுவரை வழங்கப்பட்ட கடன்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. கிராம கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டாலும், அதன் தொகையை முறையாக திருப்பி செலுத்துவோம் என அரசு உறுதி அளித்துள்ளது. எனவே, விவசாயக் கடன் ரத்தால் நபார்டு வங்கிக்கு எவ்வித சிக்கலும் இல்லை.

அதேபோல, விவசாயக் கடன்தள்ளுபடி ஆனதால், வரும் ஆண்டில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் மீண்டும் அதிக அளவில் கடன் வாங்க வாய்ப்பு உள்ளது.

ரூ.45 லட்சம் வரை நிதி

தமிழகத்தில் 650 உழவர் உற்பத்திக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நபார்டு வங்கி மூலம் 310 குழுக்கள் இயங்குகின்றன. அவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் ரூ.15 லட்சம் முதல் 25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. தற்போது தேசியஅளவில் சிறந்த உழவர் உற்பத்திக்குழுக்களை தேர்வு செய்து ரூ.45 லட்சம் வரை நிதி வழங்கி,பிரத்யேக பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பழங்குடியின மக்கள் மேம்பாட்டுக்கும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் பொது மேலாளர்கள் என்.நீரஜா, பைஜூ என் குருப் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x