Published : 18 Nov 2015 09:07 PM
Last Updated : 18 Nov 2015 09:07 PM

சென்னை மீட்புப் பணியில் உள்ளூர் அலைச் சறுக்கு நாயகர்கள்

சென்னை - ஓ.எம்.ஆர். சாலை உள்ளிட்ட பகுதிகளி மழை - வெள்ளத்தில் சிக்கித் தவித்த பலரையும் 'கோவளம் சர்ஃபிங் பள்ளி'யைச் சேர்ந்த மூர்த்தி என்ற இளைஞரும், அவரது மாணவர்களும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

துடுப்புப் படகு மூலம் தங்கள் அலைச் சறுக்கு இளைஞர்கள் குழு மேற்கொண்ட மீட்பு நடவடிக்கை குறித்து மூர்த்தி கூறும்போது, "கடந்த திங்கள்கிழமை கடலோர போலீஸிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள கல்லூரி விடுத்தியில் 60 கல்லூரி மாணவ - மாணவிகள் வெள்ளத்தில் சிக்கியதைச் சொன்னார்கள். உடனடியாக துடுப்புப் படகுகளை எடுத்துச் சென்று அந்த மாணவர்களை மீட்டோம்.

மார்பளவுக்கு மேலான தண்ணீரில் நம்ப முடியாத அளவுக்கு அழுத்தம் காணப்பட்டது. பின்னர், போலீஸுடன் இணைந்து மீட்புப் பணிகளைத் தொடர்ந்தோம்.

சோழிங்கநல்லூர் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளுக்குச் சென்று நாங்கள் ஐந்து பேரும் 300-க்கும் மேற்பட்டோரை மீட்டோம். அந்தப் பகுதிகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. எங்கு பார்த்தாலும் கழிவுகள் கலந்த தண்ணீர். ஆங்காங்கே பாம்புகள் ஓடுவதையும் பார்க்க முடிந்தது.

ஒரு வழியாக வெள்ளத்தில் சிக்கிய பலரையும் மீட்ட பிறகு, அதை நினைவுகூரும் வகையில் போட்டோக்களும் எடுத்தோம். அங்கிருந்த சுங்கச் சாவடிக்குச் சென்று எங்கள் துடுப்புப் படகுக்கு நாங்களே ரசீது பெற்றுகொள்வது போல் ஜாலியாக படமெல்லாம் எடுத்தோம்" என்று மீட்பு நடவடிக்கைக்குப் பிந்தைய ஜாலி அனுபவத்தையும் பகிரத் தவறவில்லை மூர்த்தி.

கோவளத்தில் சர்ஃபிங் எனப்படுகிற அலைச் சறுக்கு விளையாட்டை கற்றுக்கொடுக்க “கோவளம் சமூக சர்ஃபிங்” பள்ளி செயல்பட்டு வருகிறது. அலைச் சறுக்கு விளையாட்டோடு சேர்த்து சமூக பொறுப்பையும் அப்பகுதி மாணவர்களுக்கு பள்ளி ஊட்டி வருகிறது. இப்பள்ளி மூர்த்தி நாகவன் (மீட்புப் பணிக்கு தலைமை வகித்தவர்) என்ற மீனவ சமுதாயத்தை சேர்ந்த இளைஞரால் 2012ல் தொடங்கப்பட்டது.

இவர் கோவளத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக சர்ஃபிங் சொல்லி தருகிறார். பதிலுக்கு அந்த மாணவர்கள் கடலோரத்தை சுத்தப்படுத்த வேண்டும். குடி, சிகரெட் போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். | இது குறித்த விரிவான தகவல் ->சமூக பொறுப்புடன் திகழும் கோவளம் சர்பிங் பள்ளி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x