Published : 05 Apr 2021 11:52 AM
Last Updated : 05 Apr 2021 11:52 AM

தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா: 7-ம் தேதி முதல் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வீட்டுக்கு வீடு சோதனை: ராதாகிருஷ்ணன் பேட்டி

சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் | படம்: எல்.சீனிவாசன்

7-ம் தேதி முதல் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வீட்டுக்கு வீடு சென்று, காய்ச்சல் சோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''நாட்டில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவந்த நிலையில், முதன்முறையாக அன்றாட கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மகாராஷ்டிரா, மும்பை, சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய இடங்களில் உள்ள நோய்த் தொற்றின் அளவுக்கு இல்லாவிட்டாலும்கூட, தமிழ்நாட்டிலும் அச்சம் தரும் வகையில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

பரிசோதனை, கரோனா நோயாளிகளை அடையாளம் காண்பது, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை முறையாக மேற்கொண்டு வருகிறோம். 7-ம் தேதி முதல் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வீட்டுக்கு வீடு சென்று, காய்ச்சல் சோதனை மேற்கொள்ளப்படும். தேர்தல் காலத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் வாக்குப் பதிவுக்குப் பிறகு இதைத் தொடங்குவோம். உள்ளாட்சி, வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து முழு வீச்சில் இந்தப் பணிகளைத் தொடங்க உள்ளனர்.

4.5 லட்சம் குடியிருப்புப் பகுதிகளில் 925 நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து, தன்னார்வலர்கள் மூலம் பொருட்களை விநியோகம் செய்யவும், அவர்களை முழுமையாகப் பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல தொற்றைக் குறைக்கக் களப்பணியாளர்கள் குழுக்களும், கண்காணிப்புக் குழுக்களும் முழு வீச்சில் செயல்படும். தற்போது 3 ஆக உள்ள கரோனா தொற்றை உறுதிப்படுத்தி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் மையங்கள் 10 ஆக உயர்த்தப்படும். காய்ச்சல் முகாம்களும் முழுவீச்சில் தொடங்கப்பட உள்ளன''.

இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x