Published : 05 Apr 2021 03:14 AM
Last Updated : 05 Apr 2021 03:14 AM

அதிமுக - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும்: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நம்பிக்கை

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுகளில் பாஜகபெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இதேபோல, அசாமிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிஅமைக்கும். கேரளாவில் பாஜகவை மக்கள் வரவேற்கின்றனர். அங்கு பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் நடந்த ஊழல்களால் மக்கள் கோபத்துடன் இருக்கின்றனர். எனவே, அங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

தமிழகத்தை பொறுத்தவரை பிரதமர் மோடியின் நல்ல திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர். பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு வெற்றிகரமாக அமல்படுத்தி வருகிறது. தமிழகம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

எம்ஜிஆர் ஏழை மக்களுக்கு பல நலத் திட்டங்களை செயல்படுத்தினார். அவரது வழியில் ஜெயலலிதாவும் ஏழை மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். எனவே, தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.

சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதலால் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்தஇரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தாக்குதல் நடந்ததை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சார பயணங்களை ரத்து செய்துவிட்டு அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நக்ஸல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய குடியுரிமை சட்டம் தொடர்பாக எங்கள் முடிவில் உறுதியாக இருக்கிறோம். இதுதொடர்பாக அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது குறித்து அவர்களிடம் பேசுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.

தமிழகத்தில் நடக்கும் வருமான வரித் துறை சோதனையில் உள்நோக்கம் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறதே?

கிடைத்த தகவல் அடிப்படையில் வருமான வரித் துறை அதிகாரிகள் தன்னிச்சையாகவே சோதனைநடத்தியுள்ளனர். திமுகதான் இதை அரசியலாக்குகிறது.

கருத்துக் கணிப்பு முடிவுகள் அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிராக வருகிறதே?

கருத்துக் கணிப்புகள் குறித்து நாங்கள் இதற்கு முன்பும் கருத்து கூறியது கிடையாது. அதிமுக தலைமையிலான கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் வகையில்தான் கள நிலவரம் உள்ளது.

தமிழகத்தின் பிரச்சினைகளை கையில் எடுக்காததால்தான் பாஜகவால் தமிழகத்தில் வளர்ச்சிஅடைய முடியவில்லை என்று நினைக்கிறீர்களா?

மாநில பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மாநில மக்களின் நம்பிக்கைகளை காங்கிரஸ் மதிக்கவில்லை. ஆனால், மாநிலமக்களின் நம்பிக்கை, கலாச்சாரம், மொழி உணர்வு ஆகியவற்றை தேசியத்துடன் பாஜக இணைத்துப் பார்க்கிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது மத்தியில் திமுக அங்கம் வகித்தகாங்கிரஸ் கூட்டணி அரசுதான்.பிரதமர் மோடி வந்த பிறகுதான்ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டது. இந்துக்கள் மீது அக்கறை இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார். ஆனால், கந்தசஷ்டி கவசத்தை தரக்குறைவாக விமர்சித்த கூட்டத்தைஅவர் கண்டிக்கவில்லையே.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாமல் தாமதம்ஆவது விமர்சிக்கப்படுகிறதே?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான மண் பரிசோதனை, கட்டிட வரைபடம் தயாரிப்பு, அனுமதி வாங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x