Published : 25 Nov 2015 02:24 PM
Last Updated : 25 Nov 2015 02:24 PM

மழை பாதிப்பு: சென்னை உள்கட்டமைப்பு சேதம் ரூ.2,000 கோடி

சாலைகள், தெரு விளக்குகள் உட்பட பல்வேறு உள்கட்டமைப்பு சேதங்களை சென்னை மாநகராட்சி பட்டியலிடத் தொடங்கியுள்ளது. உள்கட்டமைப்பு மொத்த சேதம் ரூ.2,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் சுமார் 200 வார்டுகளில் உள்கட்டமைப்பு சேதம், வார்டு ஒன்றுக்கு ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதாரணமாக, அரும்பாக்கம் பகுதியில் 105-ம் வார்டில் 232 உள்சாலைகளில் 60% சாலைகள் சேதமடைந்துள்ளதைக் குறிப்பிடலாம்.

குறிப்பாக, பெரும்பாலான உள் சாலைகள் சிமென்ட் - கான்க்ரீட் சாலைகளானதால் சேதம் அதிகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக வார்டு கவுன்சிலர் சுகுமார்பாபு கூறும்போது, “பெரும்பாலான சாலைகள் கடந்த 4 ஆண்டுகளில் போடப்பட்டவை. மழை - வெள்ளம் காரணமாக ரேஷன் கடையை அம்மா கேன்டீனுக்குக் கொண்டு சென்றோம். எம்.எம்.டி.ஏ காலனி பிரதான சாலை, ரஸாக் பூங்கா பிரதான சாலை, விஜயகாபுரம் பிரதான சாலை, நெடுஞ்சாலைத் துறை பராமரிக்கும் 100 அடி சாலை ஆகியவை சேதமடையவில்லை” என்றார்.

வார்டு எண் 58-ல் 127 தெருக்களில் 22 தெருக்கள் மழையால் நாசமாகியுள்ளன. திமுக கவுன்சிலர் டி.களரிமுத்து கூறும்போது, “ரிதர்டன் சாலை மற்றும் பெரம்பூர் பாரக்ஸ் சாலை படு மோசமாகியுள்ளது” என்றார்.

மேலும், ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை ஆகியவற்றிலும் தேங்கும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் எல்.இ.டி. விளக்குகள் வேலை செய்யவில்லை. இதனைப் பழுது பார்க்க போதிய ஊழியர்கள் இல்லை என்கிறார் 91-ம் வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் பி.வி.தமிழ்செல்வன்.

“பழுதடைந்த சாலைகளை சரி செய்ய எங்களுக்கு ரூ.5 கோடி தேவைப்படும். மொத்தம் 229 சாலைகள் எங்கள் வார்டில் உள்ளன” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி முக்கியப் பணிகளுக்காக ரூ.2,000 கோடிக்கும் அதிகமான தொகை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x