Published : 05 Nov 2015 07:51 AM
Last Updated : 05 Nov 2015 07:51 AM

காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி சென்னையில் விவசாயிகள் உண்ணாவிரதம்: பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழு சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து விவசாயி கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக் கிரமராஜா தொடங்கி வைத்தார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங் கோவன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமாகா துணைத் தலைவர் வேலூர் ஞானசேகரன், நடிகை ரோகிணி, இந்திய ஜனநாயகக் கட்சியின் செயல் தலைவர் ரவி பச்சமுத்து, கீழ்பவானி பாசன விவசாய சங்கத் தலைவர் நல்லசாமி, வீராணம் ஏரி விவசாயிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, நெல் ஜெயராமன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

உண்ணாவிரதப் போராட்டத் தில் பி.ஆர்.பாண்டியன் பேசும் போது, ‘‘கட்சி வேறுபாடுகள் இன்றி அனைத்துக் கட்சிகளும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. விவ சாயத்துக்கு மட்டுமின்றி, சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி விளங்குகிறது. எனவே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் பங்கீட்டுக் குழுவை அமைக்க வேண்டும். அதன் மூலம் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசும்போது, ‘‘மத்தியில் கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், மோடி அரசு விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறித்து பெரு முதலாளிகளுக்கு தாரை வார்க்கப் பார்க்கிறது. விவசாயிகளின் எந்தப் போராட்டத்துக்கும் காங்கிரஸ் ஆதரவளிக்கும்’’ என்றார்.

டி.கே.எஸ். இளங்கோவன் பேசும்போது, ‘‘ஆட்சியில் இருந் தாலும் இல்லாவிட்டாலும் விவசாயி களின் போராட்டத்தை திமுக ஆதரித்து வருகிறது. காவிரியில் தமிழகத்தின் உரிமைக்காக நடக்கும் எந்தப் போராட்டத்துக்கும் திமுக துணை நிற்கும்’’ என்றார்.

திருமாவளவன் பேசும்போது, ‘‘நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால்தான் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற முடியும். எனவே காலம் தாழ்த் தாமல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

உண்ணாவிரதப் போராட் டத்தை பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ். மணி முடித்து வைத்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர். அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

மனிதச் சங்கிலி போராட்டம்

உண்ணாவிரதத்தின் நிறைவில், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் டிசம்பர் 14-ம் தேதி நாடாளுமன்றம் எதிரே மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x