Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM

இலவச அம்மா வாஷிங் மெஷின், ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என்பது உட்பட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி உறுதி

விலையில்லா அம்மா வாஷிங் மெஷின், ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.1,500 உதவித் தொகை என்பது உட்பட அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் முழுமையாக நிறைவேற்றுவோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் நில அபகரிப்பு நடைபெறும். அராஜக ஆட்சி தொடங்கும். குடும்ப ஆட்சி தலைதூக்கும். தமிழகம் அமளிக்காடாக மாறும். கட்டப் பஞ்சாயத்துகள் நடக்கும். பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. நிர்வாக சீர்கேடு ஏற்படும். அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படும்.

எனவே, தமிழக மக்கள் அமைதியான, சாதிக் கலவரம் இல்லாத, அனைத்து சமுதாய மக்களும் நிம்மதியுடனும் வளமான வாழ்வுவாழ, வழிசெய்யும் வகையில்,அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன்வரை அடகுவைத்து பெற்ற கடன் தள்ளுபடி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம், பெண்களின் பணிச் சுமையைக் குறைக்கவிலையில்லா அம்மா வாஷிங் மெஷின், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.1,500 உதவித் தொகை, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா சூரியசக்தி அடுப்பு, கூட்டுறவு வங்கி, கூட்டுறவு நிறுவனங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி.

வீடுகளில் ரேஷன் விநியோகம்

மக்களின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் நேரடி விநியோகம், பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டாக உயர்வு, அரசு வேலையில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்வு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,500 உழவு மானியம், நெல், கரும்புக்கு ஆதார விலை உயர்வு, அரசுப் பணியில் இல்லாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி, ரூ.25 ஆயிரம் மானிய விலையில் எம்ஜிஆர் பசுமை ஆட்டோ வழங்கும் திட்டம், 18 வயதான அனைவருக்கும் கட்டணம் இல்லாமல் இருசக்கர வாகனப் பயிற்சியுடன் ஓட்டுநர் உரிமம்.

தனியார் துறை தொழில்கள், தொழிற்சாலைகளில் உள்ள வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை, காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமியப் பல்கலைக்கழகம், ஹஜ் பயணம் செல்ல மானியம் ரூ.10 கோடியாக உயர்வு, ஜெருசலேம் செல்லும் யாத்திரீகர்களுக்கு முழு கட்டணத்தையும் அரசே செலுத்தும், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரிவோர் நலன் காக்க நல வாரியம், சிறுபான்மை மக்களுக்கு இலவசமாக மயான இடம்.

சென்னையில் உலகத் தரத்தில் மொத்த மீன் விற்பனை சந்தை,அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் மாத ஊதியம் ரூ.6,000,அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா கேபிள்இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக உயர்வு, மாதம்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு முறை. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசே ஊதியம் நிர்ணயம் செய்தல், உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.5,000, மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் அமோக வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்ததும், இந்த அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x