Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM

6 அடி நிலம்கூட தரவில்லை என ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டு; மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் முதலில் இடம் மறுத்தது ஏன்?- தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி விளக்கம்

சேலம்

திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் முதலில் இடம் மறுத்தது ஏன் என்பது தொடர்பாக தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட வனவாசியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள் இறந்தபோது, அவருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வேண்டும்என கருணாநிதியிடம் கோரிக்கைவைத்தோம்.

அதற்கு பதில் அளித்த கருணாநிதி, மறைந்த முதல்வர்களுக்கு மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய இடம் அளிக்க முடியாது. ராமாவரம் தோட்டத்தில் அவருக்கு இடம் இருப்பதால் அங்கேயே அடக்கம் செய்து கொள்ளுங்கள் என கோப்புகளின் வாயிலாக தெரிவித்தார்.

அதேபோல, காமராஜர் இறந்தபோது, அவரும் முன்னாள் முதல்வர் என்பதால், மெரினா கடற்கரையில் இடம் அளிக்க முடியாதுஎன மறுத்துவிட்டார்.

அந்த அடிப்படையில்தான் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய இடம் அளிக்க வழிவகை இல்லை என்று தெரிவித்தோம்.

மேலும் கருணாநிதியை அடக்கம் செய்ய, ரூ.150 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை கிண்டியில் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு எதிரே கொடுப்பதற்கு உத்தரவுகள் வழங்கினோம்.

ஆனால், அதைப் பெற ஸ்டாலின் மறுத்துவிட்டு, நீதிமன்றம் சென்றார். நீதிமன்ற உத்தரவுப்படி மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய நிலம் அளித்தோம்.

ஆனால், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, எம்ஜிஆர் மனைவி ஜானகி மற்றும், காமராஜர் ஆகியோர் மறைவின்போது என்னமுடிவு எடுத்தாரோ, அந்த முடிவைத்தான் நானும் பின்பற்றினேன்.

உண்மை இப்படி இருக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகம் முழுவதும், தனது தந்தை கருணாநிதிக்கு 6 அடி நிலம்கூட கொடுக்கவில்லை என பொய்யான குற்றச்சாட்டை கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x