Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM

மகள் வீட்டில் சோதனைக்கு வந்தபோது காபி சாப்பிட்டு, டி.வி பார்த்தனர்: ‘ரெய்டால் திமுகவுக்குதான் கூடுதலாக 25 சீட்’: வருமானவரித் துறையினர் கூறியதாக மு.க.ஸ்டாலின் தகவல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடைத்தெருவில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று பிரச்சாரம் செய்யும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம், கீழ்வேளூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி, நாகை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ், திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து ஆகியோரை ஆதரித்து, வேதாரண்யம் கடைவீதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

இந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர், பணம் என்றால் ஓ.எஸ்.மணியன். பணம் இல்லை என்றால் நோ எஸ்.மணியன். கஜா புயலின்போது, பொதுமக்கள் அவரை விரட்டி அடித்துள்ளனர். இதனால், அமைச்சர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி 150 பேர் மீது கொலை முயற்சி, திருட்டு, குண்டர் சட்டம் என பல்வேறு வழக்குகளைப் போடச் செய்திருக்கிறார். இதன் காரணமாக, அவர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும், அவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும்.

தமிழக மீனவர்கள் இந்திய எல்லையில், சர்வதேச எல்லையில் மீன் பிடித்தாலே இலங்கை கடற்படையினர் சுடுகின்றனர். ஆனால், ஜூலை முதல் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்கலாம் என்றுமீனவர்களிடம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பொய்யான வாக்குறுதியை அளித்து வாக்கு சேகரிக்கிறார். வரும் 6-ம் தேதி அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

கன்னியாகுமரியில் பேசிய பிரதமர் மோடி, மீனவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த துறைமுகம் கொண்டு வருவேன் என்று ஊரின் பெயரைக் குறிப்பிடாமல் பேசி இருக்கிறார். அந்த ஊருக்கு துறைமுகம் வரக்கூடாது என்றுதான் அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இதில், முதல்வர் பழனிசாமி துறைமுகம் வராது என்கிறார். பிரதமர் துறைமுகத்தை கொண்டுவருவேன் என்கிறார். அனைத்தும் வாக்கு வாங்குவதற்காக போடும் நாடகம்.

என் மகள் வீட்டுக்கு சோதனையிட வந்த வருமானவரித் துறைஅதிகாரிகள், காபி சாப்பிட்டு, டி.விபோடச் சொல்லி பார்த்திருக்கின்றனர். அப்போது, டி.வியில் நான் பேசியதை சுட்டிக்காட்டிய அவர்கள், “நாங்கள் சோதனையிட வந்ததால், உங்களுக்குதான் (திமுகவுக்கு) இன்னும் கூடுதலாக 25 சீட் கிடைக்கும்” என்று கூறியுள்ளனர்.

சொத்துக் கணக்கை சரியாக காட்டாவிட்டால், வருமானவரித் துறை சோதனை செய்வதில் தவறில்லை. ஆனால், தேர்தலுக்கு இரண்டொரு நாட்களே இருக்கும்போது என்ன அவசியம்? தேர்தல் முடிந்த பிறகு நடத்தக் கூடாதா? திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைத் தேர்தல் பணியை செய்யவிடாமல் முடக்குவதற்காகவே சோதனை செய்கிறார்கள். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வருமானவரி சோதனைக்கு பயப்படுவார்கள், கருணாநிதியால் வளர்க்கப்பட்ட நாங்கள் பயப்பட மாட்டோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x