Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM

என்னை தோற்கடித்தவருக்கு பிரச்சாரம் செய்தது காலத்தின் கட்டாயம்: தமாகாவிலிருந்து விலகிய கோவை தங்கம் விளக்கம்

என்னைத் தோற்கடித்தவருக்கு பிரச்சாரம் செய்தது காலத்தின் கட்டாயம் என திமுக-வில் இணைந்துள்ள கோவை தங்கம் தெரிவித்துள்ளார்.

2001 மற்றும் 2006 சட்டப்பேரவைத் தேர்தல்களில் கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் வென்றவர் கோவை தங்கம். 2011-ல் இதே தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தஆறுமுகத்திடம் 3 ஆயிரம்வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இம்முறை வால்பாறை சீட் அதிமுக கூட்டணியில் தமாகா-வுக்கு ஒதுக்கப்படாத நிலையில், தமாகாவிலிருந்து விலகி சுயேச்சையாக வால்பாறையில் களம் இறங்குவதாக அறிவித்தார். பின்னர் அந்த முடிவை கைவிட்டு, திமுகவில் இணைந்தார்.

அதே நேரம் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வால்பாறையில் போட்டியிடும் ஆறுமுகத்துக்காக பிரச்சாரம் செய்தார். எந்த வேட்பாளரிடம் முன்பு தோற்றாரோ, அதே வேட்பாளரின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்துள்ளார்.

இது தொடர்பாக கோவை தங்கம் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:

ஆறுமுகத்துக்காக நான் பிரச்சாரம் செய்ததற்கான காரணம்,மு.க.ஸ்டாலின் மீது நான் வைத்திருக்கும் பாசம், விசுவாசம். நன்றி. திமுக ஆட்சிக் காலத்தில், வால்பாறை தொகுதி மக்களுக்குஎம்எல்ஏ என்ற முறையில் நான்கேட்டதெல்லாம் செய்து கொடுத்தார். அதனால்தான் தொகுதி மக்களிடம் எனக்கு மிகப்பெரிய மரியாதை கிடைத்தது. அவர் எதைச் சொன்னாலும் செய்யும் எண்ணம் இயல்பாகவே என்னிடம் இருந்து வந்தது.

நான் வால்பாறையில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன் என்று அறிவித்த நேரத்தில் ஸ்டாலினே தொலைபேசியில் அழைத்து, ‘நீங்கள் திமுகவில் சேர்ந்து விடுங்கள்’ என்றார். நானும் முடிவை மாற்றிக் கொண்டேன். 10 ஆயிரம்பேருடன் நான் உடனே திமுகவில்தான் இணைய இருந்தேன். ஸ்டாலின்தான் இது தேர்தல் நேரம். வேண்டாம். எப்படியும் நான் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று முதல்வர் ஆகி விடுவேன்.

அப்போது வெற்றி விழா முடிந்த கையோடு, உங்களை எல்லாம் இணைத்துக் கொள்ளும் விழா வைத்துக் கொள்ளலாம் என்றுகேட்டுக் கொண்டார். எனவேதான் முறைப்படியான இணைப்பு நடைபெறவில்லை.

என்னைத் தோற்கடித்தவருக்கு பிரச்சாரம் செய்தது காலத்தின் கட்டாயம். ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ, அதைக் கேட்க வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டு விட்டேன். அவர்தான் எனக்கு இனிமேல் தலைவர். எனக்காக இரண்டு நாள் வால்பாறை பிரச்சாரத்துக்கு சென்று வாருங்கள்என்று அவரே சொன்னார். உண்மையில் எனக்கு போக விருப்பமே இல்லை. இருந்தாலும் தலைவர்சொன்னதை செய்வது என் கடமை.அதைத்தான் நான் செய்தேன்.அதற்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்தது. வாசனால் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை நடத்தவே முடியாது. நடத்த மாட்டார்.

இவ்வாறு கோவை தங்கம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x