Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM

நாளை மறுநாள் வாக்குப்பதிவு: தேர்தல் ஆயத்தப் பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரம்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 20 தொகுதிகளில் அதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, மாவட்ட நிர்வாகங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கடந்த மார்ச் 12 முதல் 19-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்று, மார்ச் 22-ம் தேதி வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் காட்டுமன்னார்கோவில், புவனகிரி, திட்டக்குடி, சிதம்பரம் என 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 136 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக மாவட்டத்தில் மொத்தம் 3,061 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 3,871 விவிபேட் இயந்திரங்களும் பயன்படுத்தப் படவுள்ளது. இதில் 3,001 வாக்குச்சாவடிகளில் சுமார் 14,500 ஊழியர்கள் நேரடியாக தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள்.

மேலும் தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு. தேர்தல் செலவீன பார்வையாளர்கள் குழு,பொது பார்வையாளர்கள் குழு என்று பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்களிலும் துணை ஆட்சியர்கள் வட்டாட்சியர்கள் முதல் ஓட்டுநர்கள் வரையில் இடம்பெறுகிறார்கள்.

இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய 4 தொகுதிகளில் 66 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1,659 வாக்குச் சாவடிகளில் 7,528 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள நிலையில், 1,702 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் படவுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திருக்கோவிலூர், செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி ஆகிய7 சட்டமன்ற தொகுதிகளில் 102 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் பயன்பாட்டுக்காக 2,888 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,844கட்டுப்பாட்டுக் கருவிகள், 3,034 வி.வி.பேட் கருவிகள் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டு, அந்த அறை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய நாளான நாளைய தினம் இந்த அறைகள் திறக்கப்பட்டு, வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

24 மணி நேரமும் அந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவ படையினரும் அவர்களுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு மையங்களில், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சாய்தளம் உள்ளிட்ட போதுமான அடிப்படைவசதிகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்காளர்கள் வாக்களிக்க முன்னேற்பாடு பணிகள்மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x