Published : 03 Apr 2021 07:22 PM
Last Updated : 03 Apr 2021 07:22 PM

இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள்: ‘சர்வே’ செய்து வாக்காளர்கள் ‘பல்ஸ்’ பார்க்கும் அதிமுக  

இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீடு, வீடாகச் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் உள்பட 158 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக வேட்பாளர்கள் காலை முதலே தெருத் தெருவாகவும், குடியிருப்புகளுக்கும் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில் கடந்த சில நாட்களாக வழக்கத்தைவிட அதிகமாக கடும் வெயில் சுட்டெரிக்கிறது. தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு மேல் சாலையில் மக்களால் நடமாட முடியவில்லை. ஆனால், வேட்பாளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடி, முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், அக்கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தேமுதிக பிரமலதா, நாம் தமிழர் கட்சி சீமான், மக்கள் நீதி மையம் கமலஹாசன் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மதுரையில் பிரச்சாரம் செய்து சென்றனர்.

மதுரையில் கடும் வெயில் இருந்த நிலையிலும் மக்கள், அதை பொருட்படுத்தாமல் தலைவர்களின் பேச்சைக் கேட்க கூட்டமாக திரண்டு வந்திருந்தனர்.

கடந்த கால தேர்தல் பிரச்சாரத்தில் சுவர் விளம்பரமும், திறந்த வெளி ஜீப் பிரச்சாரமுமே முக்கிய பங்கு வகித்தன. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்தனர். திமுக, அதிமுக கட்சிகள் மாறிமாறி ஒருவரையொருவர் குறை கூறி தேர்தல் பிரச்சார வீடியோ விளம்பரங்களை வெளியிட்டனர்.

அதிமுகவில் அமைச்சர்கள் ஆர்பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா, தங்கள் தொகுதி நிலவரங்களை சர்வே செய்து வாக்காளர்கள் பல்ஸ் பார்த்தனர். அதற்கு தகுந்தார்போல் வாக்காளர்களை ஈர்க்க, கடைசி நேர வியூகங்களை அரங்கேற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலேயே எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கடும் போட்டி கொடுப்பதால் அவர்களால் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல முடியவில்லை.

அந்தத் தொகுதிகளின் தேர்தல் பணிகளையும் அவர்களால் கவனிக்க முடியவில்லை. ‘சீட்’ கிடைக்காததால் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர், பிரச்சாரத்திற்கு செல்லாமல் வேட்பாளர்களை தவிக்க விடுவதாகக் கூறப்படுகிறது.

அதனால், அதிமுக வேட்பாளர்கள் நிர்வாகிகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஒருங்கிணைக்க முடியாமல் தற்போது வரை திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் கட்சித் தலைமையிடம் பகிரங்கமாகவே புகார் தெரிவித்தார். அதன்பிறகே ஒரளவு தற்போது நிர்வாகிகள் அவருடன் பிரச்சாரத்திற்கு சென்று வருகின்றனர்.

திமுக போட்டியிடக்கூடிய மதுரை மத்திய, கிழக்கு, வடக்கு, மேற்கு, திருமங்கலம், சோழவந்தான் உள்பட 6 தொகுதிகளில் அக்கட்சியினரே முழுக்க முழுக்க தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கின்றனர்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரியளவில் தேர்தல் பொறுப்புகள் வழங்கப்படவில்லை. அது கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக வேட்பாளர்களின் பிரச்சாரத்தில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையேற்றம், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை, மேம்பால திட்டங்கள் அறிவித்து வராமல் இருப்பதும், முக்கிய குற்றச்சாட்டாக கூறப்படுகிறது.

அதுபோல், மாதந்தோறும் மின் கட்டணம், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை சொல்லி அகட்சியினர் வாக்குசேகரிக்கின்றனர்.

அதிமுகவினர் பெண்களுக்கு வாஷிங்மிஷின், ரூ.1,500 உதவித்தொகை, 6 இலவச கியாஸ் சிலிண்டர்கள் போன்ற வாக்குறுதிகளை சொல்லி வாக்கு சேகரிக்கின்றனர்.

மேலும், திமுகவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுரையில் முன்புபோல் நடந்த சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறுகின்றனர்.

அமமுகவினர், ஈபிஎஸ்-ஓபிஎஸ் துரோகத்திற்கும், கடந்த கால திமுக ஆட்சியின் அவலங்களையும் கூறி வாக்கு சேகரிக்கின்றனர். நாம் தமிழர், மக்கள் நீதியம் மையம் உள்ளிட்ட கட்சிகள், மாற்றத்தை ஏற்படுத்துங்கள், இலவசங்களை நம்பாதீர்கள் என்று கூறி வாக்கு சேகரிக்கின்றனர். இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரம் ஒய்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x