Last Updated : 06 Jun, 2014 10:00 AM

 

Published : 06 Jun 2014 10:00 AM
Last Updated : 06 Jun 2014 10:00 AM

திருவொற்றியூரில் திறந்து பல மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராத கண்டெய்னர் நிறுத்த முனையம்: தொடர்கதையாகி வரும் போக்குவரத்து நெரிசல்

திருவொற்றியூரில் கன்டெய்னர் வாகன நிறுத்த மையம் திறக்கப்பட்டும் வாகனங்கள் அதற்குள் செல்வதில்லை. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி வருகிறது.

சென்னை துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் கன்டெய்னர்கள் கையாளப்படுகிறது. இதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தாததால், பல ஆண்டுகளாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதற்கு தீர்வு காணும் விதத்தில், ரூ.600 கோடி மதிப்பில் இணைப்புச் சாலைகள் திட்டம், ரூ.1,450 கோடியில் மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலம், திரு வொற்றியூரில் 11 ஏக்கர் நிலத்தில் வாகன நிறுத்த மையம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இதில், துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறை வடைந்து விட்டன. திருவொற்றியூரில் 11 ஏக்கர் பரப்பளவில் ரூ.6 கோடி செலவில் அமைக்கப்பட்ட வாகன நிறுத்த மையத்தை, கடந்த ஆண்டு நவம்பரில் அப்போதைய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். ஆனால், திறந்த அன்றே இம்மையம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவொற்றியூரைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி உரிமையாளர் ஆனந்த், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

துறைமுகத்தில் ஆவணப் பரிசோதனைகளில் ஏற்படும் கால தாமதம்தான் கன்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் ஆகும். இதனால், திருவொற்றியூரில் வாகன நிறுத்த மையம் அமைத்து, அங்கேயே துறைமுக நுழைவுச் சீட்டு, முனையம் துறைமுகத்தில் உள்ள தனியார் சரக்குப் பெட்டக முனையங்களின் அனுமதிச் சீட்டுகளை வழங்கவும், கன்டெய்னர் சர்வே, சுங்கத்துறை சோதனை உள்ளிட்ட அனைத்து விதமான சோதனைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது. அப்படி செய்தால், துறைமுக நுழைவாயிலில் கன்டெய்னர்கள் காத்திருக்காமல் எளிதாகவும் விரைவாக வும் செல்லலாம் என கருதப்பட்டது.

இதற்காக திருவொற்றியூர் நகராட்சி யிடம் இருந்து நிலம் பெறப்பட்டு, 2007 ஜூனில் சென்னை துறைமுகத்திடம் குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அங்கு வாகன நிறுத்தும் மையத்தை அமைப்பதில் துறைமுக நிர்வாகம் குழப்பமான முடிவுகளையே எடுத்தது. முதலில் இந்த இடத்தை சென்னை கன்டெய்னர் டெர்மினல் நிறுவனத்திடம் (சிசிடிஎல்) ஒப்படைத்தது. அந்நிறுவனத்திடம் இருந்து மூன்று ஆண்டுகளாக ரூ.4 கோடி வரை வாடகை வசூலித்து, அதை நகராட்சியிடம் துறைமுக நிர்வாகம் வழங்கியது.

மேலும், இங்கு சர்வதேச தரத்தில் வாகன நிறுத்த முனையம் அமைக்கவும், அதற்கு வசதியாக குத்தகை காலத்தை 30 ஆண்டுகளுக்கு நீடித்துத் தரும்படியும் சிசிடிஎல் கோரியது. ஆனால், 3 ஆண்டு குத்தகை காலம் முடிந்ததும் இந்த நிலமே தங்களுக்கு தேவையில்லை என திருவொற்றியூர் நகராட்சியிடமே துறைமுக நிர்வாகம் திருப்பி ஒப்படைத்துவிட்டது. இதையடுத்து, சிசிடிஎல் நிறுவனமும் அங்கிருந்து வெளியேறியது.

இதற்கிடையே, வாகன நிறுத்த முனையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துமாறு சென்னை துறை முகத்துக்கு கப்பல் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனால், அந்த இடத்தை துறைமுக நிர்வாகம் மீண்டும் பெற்று, சர்வதேச தரத்தில் வாகன நிறுத்தம் முனையம் அமைப்பதற்காக 3 முறை டெண்டர் கோரியது. ஆனால், யாரும் டெண்டரில் பங்கேற்கவில்லை. பின்னர், அவசர கோலத்தில் மையத்தை அமைத்து, திறந்துவிட்டனர்.

ஆனால், தற்போது அங்கு லாரிக ளுக்கு நுழைவுச் சீட்டு வழங்குவதற்கான ஒரு கவுன்ட்டர் மட்டுமே உள்ளது. மற்ற எந்த கவுன்ட்டர்களும் திறக்கப் படாததால் மையத்துக்குள் லாரிகள் செல்வதில்லை. இதனால், மீண்டும் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.

இரு தினங்களுக்கு முன்பு, எண்ணூர் விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, போலீஸார் லாரிகளை வலுக்கட்டாயமாக கொண்டு போய் முனையத்தில் நிறுத்தினர். மறுநாளே மீண்டும் பழையபடியே சாலையில் கன்டெய்னர் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. வாகன நிறுத்த முனையத்தில் எல்லா பணிகளையும் முடித்து, அதை முழுமையாக பயன்படுத்தினால்தான் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்.

இவ்வாறு ஆனந்த் கூறினார்.

இதுகுறித்து, துறைமுக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இந்த இடம் மத்திய கிடங்கு நிறுவனத்திடம் ஒப்படைக் கப்பட்டுவிட்டது. அவர்கள், அங்கு கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர் இப்பணிகள் நிறைவடைந்ததும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்’’ என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x