Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM

தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் இருந்து ரங்கசாமி தூக்கி எறியப்படுவார்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி கருத்து

புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் இருந்து ரங்கசாமி தூக்கி எறியப்படுவார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் கூறியதாவது:

பாஜக தனது அதிகார பலம்,பண பலத்தை வைத்து புதுச்சேரிதேர்தலில் நிற்கிறது. பல தொகுதிகளில் அராஜகம் செய்கிறார்கள். காட்டேரிக்குப்பத்தில் பழங்கு டியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று மிரட்டுகிறார்கள். சிலரை

விலை கொடுத்து வாங்குகிறார் கள். புதுச்சேரியில் அவர்கள் காலூன்றினால் அமைதி போய்விடும். மத ஒற்றுமை இருக்காது. மக்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாது. எனவே, புதுச்சேரி மக்கள் ஒட்டுமொத்தமாக பாஜகவை நிராகரிக்க வேண்டும்.

மக்களுக்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வருவோம் என்பதை தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறியுள்ளோம். ஆனால், என்ஆர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 90 சதவீதம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து வெளியிட்டுள்ளனர்.

பிரச்சாரத்துக்கு செல்லும் போது ரங்கசாமி அபாண்டமாக பொய்யை கூறி வருகிறார். அதிமுக, பாஜக வேட்பாளர்கள் நிற்கும் இடத்துக்கு சென்று ரங்கசாமி பிரச்சாரம் செய்யவில்லை. இதிலிருந்து என்ஆர் காங்கிரஸ் பாஜக, அதிமுக கூட்டணியில் விரிசல் இருப்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இந்த தேர்தல் வரை தான் ரங்கசாமியை பாஜக மதிக்கும். அதன் பிறகு அவர் தூக்கி எறியப்படுவார். காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கினார்களோ, அதே வேலையை என்ஆர் காங்கிரஸிலும் செய்வார்கள். இது நடக்கப் போகிறது என்று தெரிவித்தார்.

வருமான வரி சோதனைக்கு திமுக அஞ்சாது

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நாராயணசாமி, “இது கண்டிக்கத்தக்கது. தோல்வி பயத்தால் பாஜக, வருமானவரித் துறையை ஏவி விட்டு, ஸ்டாலின் குடும்பத்துக்கு களங்கம் விளைவித்து மக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பவே இந்த சோதனையை நடத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களின் குடும்பங்கள் பெயருக்கு களங்கம் விளைவிக்க தேர்தல் நேரத்தில் இந்த வேலையை செய்கிறார்கள்.

ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை செய்ததை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தல் நெருக்கமான நேரத்தில் நடக்கும் இச்சோதனையின் உள்நோக்கம் மக்களுக்கு தெளிவாக தெரியும்.பல சோதனைகளை திமுக கண்டுள்ளது. அவர்கள் அஞ்சப் போவதில்லை. எதிர்த்து நிற்பார்கள். நீதி, நியாயம் வெல்லும். திமுக கூட்டணி வெல்லும். ஸ்டாலின் முதல்வராவார்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x