Last Updated : 02 Apr, 2021 03:12 AM

 

Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM

25 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி மோதல்: திருத்தணியில் வெல்லப் போவது திமுகவா, அதிமுகவா?

திருத்தணி

ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள திருத்தணி தொகுதியில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்டவை அமைந்துள்ளன. வன்னியர், செங்குந்தர், தலித் மற்றும் தெலுங்கு மொழி பேசும் சமூகத்தினர் கணிசமாக வசிக்கும் இத்தொகுதியில், 1,41,923 ஆண்கள், 1,48,501 பெண்கள், 28 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,90,452 வாக்காளர்கள் உள்ளனர்.

இங்கு நடைபெற்ற 14 தேர்தல்களில், 6 முறை அதிமுக, 3 முறை திமுக, இருமுறை காங்கிரஸ் மற்றும் தலா ஒருமுறை சுயேச்சை, பாமக, தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கோடைகாலங்களில் நிலவும் கடும் குடிநீர்ப் பஞ்சம், கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தாதது, பள்ளிப்பட்டு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தாதது ஆகியவை நீண்டகாலப் பிரச்சினைகளாகும்.

இத்தேர்தலில் கோ.அரி (அதிமுக), எஸ்.சந்திரன் (திமுக), டி.கிருஷ்ணமூர்த்தி (தேமுதிக), எல்.அகிலா (நாம் தமிழர்), எம்.டி.தணிகைமலை (இந்திய ஜனநாயக கட்சி), என்.மகேந்திரன் (பகுஜன் சமாஜ் கட்சி), மாணிக்கம் (அனைத்திந்திய ஜனநாயக மக்கள் கழகம்) உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனினும், அதிமுக, திமுக வேட்பாளர்களிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

ஏற்கெனவே திருத்தணி எம்எல்ஏ மற்றும் அரக்கோணம் எம்.பி.யாக இருந்துள்ள கோ.அரிக்கு தொகுதி மக்களிடையே நல்ல அறிமுகம் உள்ளது. அதிமுக, பாமக வாக்கு வங்கி இவருக்கு பலம். எனினும், தற்போதைய எம்எல்ஏ நரசிம்மனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு, கூட்டணிக் கட்சியாக இருந்த தேமுதிக சார்பில் கிருஷ்ணமூர்த்தி களமிறங்கியுள்ளது ஆகியவை பலவீனம்.

திமுக வேட்பாளர் எஸ்.சந்திரன், கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்டப் பொறுப்பு குழு உறுப்பினராக உள்ளார். இவர் இருமுறையும், அவரது மனைவி ஒருமுறையும் திருத்தணி நகராட்சித் தலைவராக இருந்துள்ளனர். மக்களிடம் உள்ள அறிமுகம், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கி ஆகியவை இவருக்கு பலம். மேலும், விவசாய இடு பொருட்கள் விலை உயர்வு, புதிய வேளாண் சட்டங்கள், நெசவுத் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஆகியவற்றால் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் திமுக வேட்பாளருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

அதேசமயம், வன்னியர் சமூகத்தினரின் வாக்குகள் கணிசமான அளவுக்கு அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், இளைஞர்களின் வாக்குகள் நாம் தமிழர் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது திமுக வேட்பாளரின் பலவீனம். 25 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தணி தொகுதியில் அதிமுக, திமுக கட்சிகள் நேரடியாக மோதும் சூழலில், தொகுதியைக் கைப்பற்றப் போவது யார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x