Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM

முத்தலாக் தடை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு முஸ்லிம் பெண் பிரச்சாரம்: ‘15 ஆண்டுக்கு முன் சட்டம் வந்திருந்தால் பாதிக்கப்பட்டிருக்க மாட்டேன்’

கரூர்

முத்தலாக் தடை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக கும்பகோணத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே உள்ள சர்ச் சாலையைச் சேர்ந்தவர் பாத்திமுத்து(51). இவர், மத்திய அரசின் முத்தலாக் தடை சட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்து, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இத்தொகுதிக்குட்பட்ட திருக்காடுதுறையில் மார்ச் 29-ம் தேதிபாஜக வேட்பாளர் அண்ணாமலையுடன் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசியது:

நடுரோட்டில் நின்றேன்

மத்திய அரசு தற்போது நிறைவேற்றி இருக்கும் முத்தலாக் தடை சட்டத்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்திருந்தால், என் வாழ்க்கை வீணாக போயிருக்காது. முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட நான் எனது 3 பிள்ளைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டேன்.

அந்த ஒரே காரணத்துக்காகத்தான் கும்பகோணத்தில் இருந்து இங்கு வந்துள்ளேன். என்னை யாரும் பிரச்சாரம் செய்ய அழைக்கவில்லை. நானாக எனது காரில் சொந்த செலவில் இங்கு வந்திருக்கிறேன்.

அன்றைக்கு இந்த சட்டம் வந்திருந்தால், அழகான குடும்பம், அன்பான பிள்ளைகள் என வாழ்ந்திருப்பேன். அன்றைக்கு நடுரோட்டில் நின்றேன். இன்றைக்கு பிள்ளைகள் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகின்றனர். பேரப்பிள்ளைகள் உள்ளனர்.

இந்தத் தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக உள்ள செந்தில் பாலாஜி, முதலில் கரூர் தொகுதி, பிறகு அரவக்குறிச்சி தொகுதி என போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு, தற்போது மீண்டும் கரூரில் போட்டியிடுகிறார். இங்கு மீண்டும் போட்டியிட்டால் மக்கள் துரத்தியடிப்பார்கள் என்பதால் அவர் கரூருக்கு சென்றுவிட்டார். ஆனால், அண்ணாமலை தனது ஐபிஎஸ் பதவியை தூக்கி எறிந்துவிட்டு வந்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தவும், தமிழகத்தில் மீண்டும் முதல்வர் பழனிசாமியின் ஆட்சி அமையவும், இத்தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலைக்கு அனைவரும் தாமரைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

அப்போது, வேட்பாளர் அண்ணாமலை, கரூர் ஒன்றிய அதிமுக செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இன்று பாஜகவில் இணைகிறேன்

இதுகுறித்து பாத்திமுத்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:பாஜகவால் ஈர்க்கப்பட்டு இத்தேர்தலில் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்து வருகிறேன். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளேன். கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதிசீனிவாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தற்போது கடந்த ஒரு வாரமாக அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறேன். வரும் 4-ம் தேதி வரை இங்கு பிரச்சாரம் செய்ய உள்ளேன். நாளை (இன்று) அரவக்குறிச்சி வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் முறைப்படி இணைய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x