Published : 31 Mar 2021 12:20 PM
Last Updated : 31 Mar 2021 12:20 PM

வாட்டரே இல்லாத ஊருக்கு வாஷிங் மெஷின் கொடுத்து என்ன செய்வது?- கே.பாலகிருஷ்ணன் கேள்வி

வாட்டரே இல்லாத ஊருக்கு வாஷிங் மெஷின் கொடுத்து என்ன செய்வது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக தனது தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரருக்கும் இலவச வாஷிங் மெஷின் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. இதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் சீரணி அரங்கில், திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சிந்தனைச்செல்வனை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று (மார்ச் 30) மாலை பேசினார். அப்போது பேசிய அவர், தண்ணீர் இல்லாத ஊருக்கு வாஷிங் மெஷின் எதற்கு எனக் கேள்வி எழுப்பினார்.

"தமிழ்நாட்டில் 'வாட்டரே' இல்லை என்கிறார்கள். பல ஊர்களில் தண்ணீரே கிடையாது. 'வாட்டரே' இல்லாத ஊருக்கு வாஷிங் மெஷின் கொடுத்து என்ன செய்வது? நாட்டு மக்களுக்கு வாஷிங் மெஷின் இல்லை என்பதுதான் பிரச்சினையா? எல்லோரும் வாஷிங் மெஷின்தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்களா?

இன்றைக்கு பிரதமர் மோடி வந்து திருக்குறளைச் சொல்லி நாம் திருக்குறளைப் படிக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு நிலைமையை மாற்றி வைத்திருக்கின்றனர். ஒழுங்காகவாவது திருக்குறளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் அல்லவா? 'உழுதுண்டு வாழ்வாரே...' என்ற திருக்குறளை எழுதிக் கொடுத்தவர்கள் என்ன எழுதிக் கொடுத்தனர் எனத் தெரியவில்லை.

அழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என எழுதிக் கொடுத்துவிட்டனர். ஒழுங்காக எழுதிக் கொடுக்கும் ஆளை வைத்துக்கொள்ள முடியவில்லை. திருக்குறளையும், திருவள்ளுவரையும் அவமானப்படுத்தும் நிலைமை உள்ளது" எனப் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x