Published : 30 Mar 2021 03:15 AM
Last Updated : 30 Mar 2021 03:15 AM

அதானி துறைமுக விரிவாக்கத்தை தடுத்து நிறுத்துவோம்: பிரச்சாரத்தில் பொன்னேரி தொகுதி வேட்பாளர்கள் வாக்குறுதி

காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்தை தடுத்து நிறுத்துவோம் என்ற வாக்குறுதியுடன் பொன்னேரி தொகுதியில், அதிமுக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பொன்னேரி (தனி) தொகுதியில் ‘சிட்டிங்’ எம்எல்ஏ சிறுணியம் பி.பலராமன் (அதிமுக), துரை.சந்திரசேகர் (காங்கிரஸ்), பொன்.ராஜா (அமமுக), ஏ.மகேஸ்வரி (நாம் தமிழர்), டி.தேசிங்குராஜன்( மக்கள் நீதி மய்யம்), ஜெ.பவானி இளவேனில் (பகுஜன் சமாஜ்) உட்பட மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் இரவு வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக வேட்பாளர் சிறுணியம் பலராமன், மீஞ்சூர், ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர், "இலவச வாஷிங்மிஷின், சூரிய அடுப்பு, ஆண்டுக்கு 6 சமையல் காஸ் சிலிண்டர்கள், வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும்" என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

மீஞ்சூரை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகள், பொன்னேரி நகரப் பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் காங்கிரஸ் வேட்பாளர் துரை.சந்திரசேகர், "தொழிற்சாலைகளில் 90 சதவீத வேலைவாய்ப்புகள் உள்ளூர் மக்களுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும், மீஞ்சூர், பொன்னேரி, ஆரணி பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கப்படும், ஆரணியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்" உள்ளிட்ட வாக்குறுதிகளை அளிக்கிறார்.

அமமுக வேட்பாளர் பொன்.ராஜா, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவர், தான் ஏற்கெனவே எம்எல்ஏ-வாக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அவை மீண்டும் துரிதப்படுத்தப்படும் என்று கூறுவதுடன், பேரூராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம், பொன்னேரியில் உள்ள தாலுகா மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளிக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டி.தேசிங்குராஜன், ``ஆரணி, கொசஸ்தலை ஆறுகளின் குறுக்கே 6 தடுப்பணைகள், பழவேற்காடு அரசு மருத்துவமனை தரம் உயர்வு, பழவேற்காட்டில் அரசு பொறியியல் கல்லூரி, அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்'' உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் வாக்கு சேகரிக்கிறார்.

பகுஜன் சமாஜ் வேட்பாளர் ஜெ.பவானி இளவேனில், ``பொன்னேரி அரசு மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை, அதிக அளவில் பொதுக்கழிப்பறைகள் அமைத்தல்'' உள்ளிட்ட வாக்குறுதிகளை அளிக்கிறார். இதேபோல, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஏ.மகேஸ்வரியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இவற்றுடன், அதிமுக, காங்கிரஸ், அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் என அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களும், காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்தை தடுத்து நிறுத்துவோம் என்று பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x