Published : 18 Nov 2015 07:02 PM
Last Updated : 18 Nov 2015 07:02 PM

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஷூ அணியாமல் கழிவறையில் துப்புரவுப் பணி: தேசிய துப்புரவு ஆணைய தலைவர் அதிருப்தி

தேசிய துப்புரவு மற்றும் மறுவாழ்வு ஆணையத்தின் தலைவர் சிவன்னா, நேற்று காலை திருச்சி ரயில் நிலைய வளாகம், பிளாட்பாரங்கள், பயணிகள் காத்திருப்பு அறை, கழிவறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

கையுறை, மேல் அங்கி, ஷூ உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள், போதிய துப்புரவு சாதனங்களுடன் தொழிலாளர்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுகின்றனரா, தண்டவாளங்களில் உள்ள கழிவுகள், குப்பைகள் எவ்வாறு அகற்றப்படுகின்றன என்று அவர் ஆய்வு செய்தார்.

மேலும், துப்புரவுத் தொழிலாளர்கள் சிலரிடம் உரிய ஊதியம் முறையாக வழங்கப்படுகிறதா, குறைகள் ஏதேனும் உள்ளனவா என்று கேட்டறிந்தார்.

பின்னர், ரயில் நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பறையில் ஷூ அணியாமல் துப்புரவுப் பணியில் பெண் தொழிலாளி ஈடுபட்டிருந்ததைக் கண்ட சிவன்னா, அதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் தனது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்தார்.

முன்னதாக, செய்தியாளர் களிடம் சிவன்னா கூறியபோது, “மனிதக் கழிவுகளை கையால் அகற்றக்கூடாது என்ற சட்டம் முறையாகப் பின்பற்றப்படுகிறதா, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம், போதிய வசதிகள் அளிக்கப்படுகிறதா என்றும், பணிகளை முடித்த பிறகு துப்புரவுத் தொழிலாளர்கள் குளிப்பதற்கு தனி குளியலறை ஒதுக்கப்பட்டுள்ளதா, சோப்பு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தேன். குறிப்பாக, மனிதக் கழிவுகளை கையால் அள்ளுமாறு தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் அல்லது அரசு அதிகாரி மீது பிணையில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் வழக்கு தொடரப்படும்” என்றார்.

தொடர்ந்து, துப்புரவுத் தொழிலாளர்கள், ரயில்வே அதிகாரிகள் ஆகியோருடன் கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் சிவன்னா ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அரியமங்கலம் குப்பைக் கிடங்கை பார்வையிட்ட சிவன்னா, “இதுதொடர்பாக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகவும், நிதி கிடைத்தவுடன் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இந்தப் பிரச்சினை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்” என்றார்.

ஆய்வின்போது, கோட்ட ரயில்வே மேலாளர் அகர்வால், கோட்ட மருத்துவ அலுவலர் மூர்த்தி மற்றும் ரயில்வே சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், மாலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சிவன்னா பங்கேற்றார். ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x