Last Updated : 28 Mar, 2021 05:30 PM

 

Published : 28 Mar 2021 05:30 PM
Last Updated : 28 Mar 2021 05:30 PM

வரலாற்றில் தமிழர்கள் யாருக்கும் பணிந்தது இல்லை என்பதை பாஜகவினர் புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி தாக்கு

வரலாற்றில் தமிழர்கள் யாருக்கும் பணிந்தது இல்லை என்பதை பாஜகவினர் புரிந்து கொள்ளவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அடையாறு, சாஸ்திரி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

''தமிழக முதல்வரை பிரதமர் மோடி ஆட்டுவிக்கிறார். அவரைத் தனது காலில் விழச் செய்கிறார். இதை நான் ஒருபோதும் ஏற்கத் தயாராக இல்லை. அமித் ஷா காலில் தமிழக முதல்வர் விழுவதை எந்தத் தமிழரும் ஏற்கமாட்டார்கள். ஆனால், தமிழக முதல்வர் ஊழல் செய்துள்ளதால், வேறு வழியின்றி அமித் ஷா காலில் விழுகிறார். தமிழக மக்களின் பணத்தைத் தமிழக முதல்வர் திருடியுள்ளார். இதனால் பாஜகவினர் வலையில் முதல்வர் சிக்கியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை தமிழக மக்களுடன் எனக்கு உறவு இருக்கிறது. தமிழக மக்களும், தமிழகமும் வேறுபாடின்றி, மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் இருந்து ஆட்சி நடைபெற வேண்டும். டெல்லியில் இருப்பவர்கள் தமிழகத்தை ஆளக்கூடாது.

தமிழகத்தின் சித்தாந்தத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்தத் தாக்குதலைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் மிகப்பெரிய பண பலம் இருக்கிறது. இந்தியாவின் சிந்தனை, தமிழகத்தின் சிந்தனை ஆகியவற்றின் மீது ஆர்எஸ்எஸ் மற்றும் நரேந்திர மோடி நடத்தும் தாக்குதல். தமிழகம் தங்களுக்கு முன் பணிந்து கிடக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

ஆனால், அவர்கள் தமிழர்களைப் பற்றிப் புரிந்துகொள்ளவில்லை. வரலாற்றில் தமிழர்கள் யாருக்கும் அடிபணிந்தது இல்லை. தமிழர்களிடம் அன்பு செலுத்தினால், பாசம் காட்டினால், அவர்கள் இரு மடங்கு திருப்பிக் கொடுப்பார்கள்.

இந்தியாவுக்கான அடித்தளத்தில் ஒரு பகுதி தமிழகம். எனக்கும் தமிழ் கற்றுக்கொள்ள ஆசை.

இதற்கு முன் நடந்த தேர்தல் என்பது அதிமுக, திமுக இடையிலான தேர்தலாக இருந்தது. ஆனால், தற்போதுள்ள தேர்தல் என்பது, அதிமுக, ஆர்எஸ்எஸ், மோடி, அமித் ஷா, பாஜக ஒருபுறமும், தமிழக மக்கள் ஒருபுறமும் இருந்து சந்திக்கும் தேர்தல்.

இந்தத் தேர்தல் யுத்தத்தில் பாஜக - அதிமுக கூட்டணி தமிழகத்தைப் பலவீனப்படுத்த முயல்கிறது. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஆயுதமாக இருந்து, அதிமுக கூட்டணியை அழிக்கும். தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார்.

இந்தத் தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் அமையும் ஆட்சி மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படாத அரசாக இருக்கும். தமிழகத்தின் மீதான தாக்குதல் முடிவுக்கு வரும். தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் வந்ததும் இது முடிந்துவிடாது. மத்தியில் பாஜகவை ஆட்சியிலிருந்து வீழ்த்திய பின்புதான் முடிவுக்கு வரும்''.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x