Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM

தேனி மாவட்டத்துக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஓபிஎஸ்: முதல்வர் பழனிசாமி போடியில் பிரச்சாரம்

போடி தேவர் சிலை முன் அத்தொகுதி அதிமுக வேட்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதல்வர் பழனிசாமி.

தேனி மாவட்டத்துக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஓபிஎஸ் என்று போடியில் முதல்வர் கே.பழனிசாமி பேசினார்.

ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய வந்த முதல்வர் பழனிசாமிக்கு தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அதிமுகவினர் ஏராளமானோர் நேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து அவர் தேனி வழியாக போடி சென்றார். அங்கு தேவர் சிலை முன்பு போடி வேட்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

ஆட்சி, அதிகாரத்தில் இருந்தபோது மக்களுக்கு திமுக நன்மை செய்யவில்லை. மக்களை குழப்பி ஏமாற்றுவதுதான் திமுகவின்வேலை. ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற அவர்களுடைய கனவு பகல் கனவாகப் போய்விடும். தமிழக மக்கள் இனியும் ஏமாற வேண்டாம். கருணாநிதி முதல்வராக இருந்தபோதும், ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோதும் மக்களின்குறைகள் அவர்களுக்குத் தெரியவில்லையா?. திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை.

அதிமுக பலமான கூட்டணி அமைத்துள்ளது. நாங்கள் அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். அதிமுகவுக்கு துரோகம் இழைத்தவர்களை தேர்தலில் டெபாசிட் இழக்கச்செய்யுங்கள். நன்றி மறந்த தங்கதமிழ்செல்வனுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

போடியின் குக்கிராமங்களின் தேவைகளை அறிந்து அவற்றைப் பூர்த்தி செய்பவர் துணை முதல்வர். அவர் தேனி மாவட்டத்துக்கும், இந்தத் தொகுதிக்கும் ஏராளமான திட்டங்களைப் பெற்றுத் தந்தவர். தமிழ்நாட்டிலே அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். இறைவனால் கொடுக்கப்பட்ட கொடையாக துணை முதல்வர் இந்த மாவட்டத்துக்கு கிடைத்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அரசு தொடர்ந்து முயற்சி எடுக்கும். திண்டுக்கல்-சபரிமலை இடையே ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மக்களவையிலும் ரவீந்திரநாத் எம்.பி. பேசியுள்ளார். போடியில் இருந்து டாப் ஸ்டேஷன் வரை ரூ.330 கோடியில் சாலை அமைக்கப்படும்.

ஒரு தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் அந்தத் தொகுதியின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும். ஆனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போடி மட்டுமின்றி இந்த மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதி மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிப்பவர். இந்தத் தொகுதிகளில் என்ன கோரிக்கைகள் வந்தாலும் அதை உடனே நிறைவேற்றிவிடுவார்.

சாலை, குடிநீர், மருத்துவம், கல்வி, தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தேனி மாவட்டத்துக்கு இந்த அரசு செய்து கொடுத்துள்ளது. அரசின் நீர் மேலாண்மை திட்டங்களால் ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி தேனி மாவட்டத்தில் விவசாயம் செழித்து நடக்கிறது.

சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு கொடுப்பது அதிமுக அரசுதான். திமுகவினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். கரோனா பாதிப்பு ஏற்பட்டநேரத்தில் டெல்லி மாநாட்டுக்குச் சென்று தேனி மாவட்டத்துக்குத் திரும்ப முடியாமல் தவித்த சிறுபான்மை மக்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் ரயில் ஏற்பாடு செய்து மருத்துவ வசதி செய்து கொடுத்தார்.

சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் நேசக்கரம் நீட்டுபவர்கள் அதிமுகவினரும், அதிமுக அரசும்தான். ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள ரூ.5 கோடியாக இருந்த நிதியுதவி ரூ.10 கோடியாக அதிகரிக்கப்பட்டது. ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே.

மேலும் காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்களை சீரமைக்க ரூ.60 லட்சம் ஒதுக்கப்பட்டது. தமிழ் மண்ணில் பிறந்த சிறுபான்மை மக்கள் வளமோடும், மகிழ்ச்சியோடும் வாழ்கிறார்கள். அதிமுக அரசுதான் இஸ்லாமிய மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை

இதைத் தொடர்ந்து போடியில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு முதல்வர் பழனிசாமி சென்றார். அங்கு இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து முதல்வர் கார் மூலம் மதுரை சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் இரவு சென்னை திரும்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x