Published : 28 Mar 2021 03:17 AM
Last Updated : 28 Mar 2021 03:17 AM

கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் டிஜிட்டல் முறையில் வாக்கு சேகரிப்பு

சென்னை

கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் டிஜிட்டல் முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக சந்தோஷ் பாபு போட்டியிடுகிறார். இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். இதேபோல், அண்ணாநகர் சட்டப்பேரவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக போட்டியிடும் பொன்ராஜும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், இவர்கள் தொகுதிக்கு நேரில் சென்று வாக்காளர்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இருவரும் டிஜிட்டல் முறையில் வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுடன் வாக்காளர்கள் தொலைபேசி வழியாக தொகுதி சார்ந்த பிரச்சினைகளை எடுத்துரைக்க 94459 47070 என்ற தொலைபேசி எண் இயங்கி வருகிறது. இது வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நேரலையில் உரையாடல்

இதுமட்டுமின்றி, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கட்சியின் நிர்வாகிகள், தங்கள் கையில் மடிக்கணினிகளைக் கொண்டு செல்கின்றனர். விருப்பப்படும் வாக்காளர்களுடன் சந்தோஷ்பாபு நேரலையில் உரையாடவும் ஏற்பாடுகளை செய்துள்ளோம். ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றிலும் நேரலையில் வாக்காளர்களை அவர் சந்தித்து வருகிறார்.

அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பொன்ராஜ், பேசிப் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் 2 டிஜிட்டல் வாகனங்களில் தொகுதி முழுவதும் வலம் வந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரு வேட்பாளர்களும் டிஜிட்டர் முறையில் வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் நேரில் வர முடியவில்லை என்ற குறையை தீர்க்கும் வகையில் கட்சியின் நிர்வாகிகளும் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x