Last Updated : 28 Mar, 2021 03:17 AM

 

Published : 28 Mar 2021 03:17 AM
Last Updated : 28 Mar 2021 03:17 AM

அருப்புக்கோட்டையில் நேருக்கு நேர் மோதும் முன்னாள் அமைச்சர்கள்

அருப்புக்கோட்டைத் தொகுதியில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் நேருக்குநேர் மோதுகின்றனர். அவர்களுக்கு சம பலத்தில் மக்கள் நீதி மய்யமும் போட்டியிடுகிறது.

அருப்புக்கோட்டைத் தொகு தியில் செட்டியார், முக்குலத்தோர், ரெட்டியார், முத்தரையர் பரவலாக வசிக்கின்றனர். இத்தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்தாலும், நெசவுத் தொழிலிலும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். இத்தொகுதியில் ஏராளமான நூற்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன.

அருப்புக்கோட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும், நெசவாளர்கள் பயன் பெறும் வகையில் கைத்தறிப் பூங்கா அமைக்க வேண்டும் ஆகியவை இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். அருப்புக்கோட்டை நகராட்சி, அருப்புக்கோட்டை ஒன்றியம் மட்டுமின்றி, விருதுநகர், சாத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளும் 40-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களும் இத்தொகுதியில் உள்ளன.

அருப்புக்கோட்டைத் தொகுதி யில் 1,08,063 ஆண் வாக்காளர்கள், 1,14,899 பெண் வாக்காளர்கள், 18 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,22,980 வாக்காளர்கள் உள்ளனர்.

இத்தொகுதியில் பார்வர்டு பிளாக் கட்சி ஒருமுறையும், அதிமுக 6 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. திருச்சுழி தொகுதி உருவாக்கப் பட்டதற்கு முன் அருப்புக்கோட்டை தொகுதியில் 2006-ல் திமுகவில் தங்கம் தென்னரசு, 2011-ல் அதிமுகவைச் சேர்ந்த வைகை செல்வன், 2016-ல் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

வரும் தேர்தலில் இத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் நேருக்குநேர் மோதுகின்றனர்.

மேலும் தேமுதிக வேட்பாளர் ரமேஷ், மக்கள் நீதி மய்யம் வேட் பாளர் உமாதேவி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உமா, புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கருப்பசாமி உட்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.

கடந்த 2011-ல் வெற்றிபெற்று அமைச்சரான வைகைச்செல்வன் இத்தொகுதியில் அரசு கலைக் கல்லூரி, போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு காவல் நிலையம் உட்பட பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்தாலும், பரிசு கொடுப்பதாகக் கூறி பச்சை நிற டோக்கன் வழங்கி ஏமாற்றியது அவரது வாக்குகளை சரியச்செய்கின்றன.

ஆனாலும் தற்போது மக்களை நேரடியாகச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் வைகைச்செல்வன் ஈடுபட்டுள்ளார்.

தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள சாத்தூர் ராமச்சந்திரன், தொகு திக்கு கூட்டுக் குடிநீர் திட்டங்களை கொண்டு வந்தது உள்ளிட்ட செயல்களால் தனது வாக்கு வங்கியை தக்க வைத்துள்ளார். கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து பல்வேறு திட்டங்களை வகுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடு பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர்களான இவர்கள் இருவருக்கும் போட்டி யாக களம் இறங்கியுள்ளார் மக் கள் நீதி மய்யம் வேட்பாளரும், பிரபல தொழில் நிறுவனத்தின் உரிமையாளருமான உமாதேவி. பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிரந்தர வேலைவாய்ப்பு, சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவோம், மரம்நடுவது, நீர் மேலாண்மை, திருநங்கைகளுக்கு தரமான வாழ்க்கையை உறுதி செய்வது எனப் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டு வாக்குச் சேகரித்து வருகிறார்.

அருப்புக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலர் கமலின் பிரச்சாரத்தைத் தொடர்ந்து அக்கட்சியினர் ஆர்வமுடன் வேலை பார்க்கிறார்கள். முன் னாள் அமைச்சர்களுக்கு கடும் போட்டியை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் உமாதேவி கொடுத்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x