Published : 12 Nov 2015 12:10 PM
Last Updated : 12 Nov 2015 12:10 PM

இது மழையின் பிழையன்று!

தண்ணீரில் தத்தளிக்கிறது தமிழகம். கடலூர் மாவட்டத் தில் மட்டும் 28 பேர் இறந்துவிட்டார்கள். பல லட்சம் ஏக்கர் பயிர்கள் அழிந்துவிட் டன. வீடுகள், கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. பல மாதங்கள் தண்ணீரின்றித் தவித்த விவசாயிகள் இப்போது கண்ணீரில் கதறித் துடிக்கிறார்கள். எங்கும் சூழ்ந்து நிற்கிறது வெள்ளம். குடிக்க குடிநீர் இல்லை, உண்ண உணவு இல்லை, மருந்து இல்லை, மின்சாரம் இல்லை. இன்னுமொரு புயல் வரும் என்று வேறு சொல்கிறார்கள்.

சரி, தமிழகத்துக்கு இவை எல்லாம் புதிதா என்ன? நான்கு அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வெள்ளம் வந்து வாரிச் சுருட்டி போய்க்கொண்டுதானே இருக்கிறது. நிலையை சீரமைக்க என்ன செய்தோம் நாம்? தற்காலிக நிவாரணங்களுடன் நின்றுவிடுகிறோம். பிரச்சினையின் ஆணிவேரைத் தேடுவதே இல்லை. நிரந்தரத் தீர்வுகளை நினைப்பதே இல்லை. காட்டை அழித்துவிட்டு ‘யானை ஊருக்குள் புகுந்துவிட்டது’ என்றும், ‘யானையின் அட்டகாசம்’ என்றும் சபிக்கிறோம். நீர் நிலைகளை நிர்மூலமாக்கிவிட்டு வெள்ளம் வந்துவிட்டது என்று அழுகிறோம். நீரும் யானையும் வெவ்வேறல்ல. இரண்டுமே மரபு வழி உயிரிகள். இடைமறித்தது நாம்தான்.

நம் முன்னோர் இயற்கையை மதித்தார்கள். அபார தொழில் நுட்பங்களுடன் நீர்நிலைகளை உருவாக்கினார்கள். காவிரி, வைகை, பாலாறு, தாமிரபரணி, பவானி, நொய்யல் என ஆறுகளின் வழியெங்கும் ஆற்றுக்கால் தொடர் ஏரிகளை (Riverfed chain tanks) வெட்டினார்கள். பெருமழை வந்தால் வெள்ளம் எங்கெல்லாம் வழிந்தோடும் என்று கணித்து மழை நீர்த்தொடர் ஏரிகளை (Rainfed chain tanks) உருவாக்கினார்கள். தவிர, இயற்கையாகவே ஆறுகளுக்கும் இதர நீர் நிலைகளுக்கும் மனிதனின் நரம்பு மண்டலத்தைப் போன்றதொரு பிணைப்பு இருந்தது. அதில் தண்ணீர் நிலத்துக்கும் மேலேயும் கீழேயும் ஊடுருவிச் சென்றது.

ஆனால், ஓர் உயிரை கண்டந் துண்டமாக வெட்டிக் கொலை செய் ததைப் போல எல்லாவற்றையும் துள்ளத் துடிக்க வெட்டி கூறுப் போட்டுவிட்டோம் நாம். ஏரிகள் இல்லை, குளங்கள் இல்லை, கண்மாய்கள் இல்லை, ஓடைகள் இல்லை, கிணறுகள் இல்லை, பல இடங்களில் ஆறுகளே இல்லை. விளைவாக கோடையில் தண்ணீரின்றித் தவிக்கும் தமிழ கம், மழையில் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

விவசாய பெருமக்கள் மற்றும் அப்பாவிகளின் கண்ணீரைக் கண்டு நம்நெஞ்சமும் கலங்குகிறது.

வாருங்கள், இனியாவது இயற்கையை மதிப்போம். இழந்தவற்றை மீட்டெடுப்போம். தீர்வுகளைத் தேடிச் செல்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x