Published : 04 Nov 2015 05:25 PM
Last Updated : 04 Nov 2015 05:25 PM

டெங்கு தடுப்பு நடவடிக்கை கோரி போராட்டம்: தமிழிசை உட்பட பாஜகவினர் 150 பேர் கைது



டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கவில்லை எனக்கூறி சென்னை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பாஜகவினர் 150 பேரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கவில்லை, மழைக்கு தாங்காத சாலைகளை அமைப்பதாக கூறியும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை (ரிப்பன் மாளிகை) முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.

இதில் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கட்சியினர் பங்கேற்று, மாநகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களை போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்தனர். இதனால் அங்கு கட்சினருக்கும் போலீஸாருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் பாஜகவினர் 150 பேரை போலீஸார் கைது பின்னர் விடுவித்தனர்.

இப்போராட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, "சென்னை மாநகராட்சி டெங்கு தொடர்பான தகவல்களை மறைத்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு 4 பேர் வரை டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்.

ஆனால் மாநகராட்சி நிர்வாகம் ஒரு மாதத்தில் 49 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொய்யான தகவலை தெரிவிக்கிறது. பாஜக போராட்டம் அறிவித்ததும், தகவலை மறைத்த அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் தரமான சாலைகளை அமைப்பதில்லை. அரை மணி நேரம் மழை பெய்தாலே, சாலை பள்ளமாகிவிடுகிறது. மாநிலத்தில் மழையால் மக்கள் அவதியுறுகிறார்கள். முதல்வர் ஜெயலலிதா மலை மேல் இருக்கிறார். இப்படி இருந்தால் எப்படி மக்கள் பிரச்சினை முதல்வருக்கு தெரியும் என்பது தெரியவில்லை.

தமிழகம் தத்தளித்துக்கொண்டிருக்கும் சூழலில் இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும். தமிழக அரசை எதிர்க்க அத்தனை கட்சிகளும் ஒன்று கூட வேண்டும். யார் முதல்வர் என்று சண்டையிட்டுக்கொட்டிருக்க வேண்டாம்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பிறகு அறிவித்துக்கொள்வோம். தமிழகத்தில் மக்களை சந்திக்காத முதல்வரையும், ஆட்சியை பிடிக்க துடித்துக்கொண்டிருக்கும் திமுகவையும் அப்புறப்படுத்த வேண்டியது அவசியம்" என்றார் அவர்.

இந்தப் போராட்டத்தில் கட்சியின் மாவட்ட தலைவர்கள் பிரகாஷ், ஜெயசங்கர், காளிதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x