Last Updated : 25 Mar, 2021 03:15 AM

 

Published : 25 Mar 2021 03:15 AM
Last Updated : 25 Mar 2021 03:15 AM

புதுவையில் கூட்டணி இருந்தும் இல்லாத நிலை: 13 தொகுதிகளிலும் தனித்தே களம் காணும் திமுக

புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் திமுக13 தொகுதிகளில் களம் கண்டாலும், கூட்டணியில் சரியான பிணைப்பு இல்லாததால் திமுக தனித்தே பிரச்சாரம் செய்து வருகிறது.

புதுச்சேரி சுதந்திரம் அடைந்து1964-ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அதில் திமுக போட்டியிடவில்லை. 1969-ம் ஆண்டு முதல் திமுக போட்டியிட்டு வருகிறது.

1969ல் 19 இடங்களிலும், 1974ல்26 இடங்களிலும், 1980ல் 15 இடங்களி லும், 1985ல் 22 இடங்களிலும், 1990ல்18 இடங்களிலும், 1991ல் 19 இடங்களிலும், 1996ல் 18 இடங்களிலும், 2001ல் 13 இடங்களிலும், 2006ல் 11 இடங்களிலும், 2011ல் 10 இடங்களிலும்,2016ல் 9 இடங்களிலும் திமுக போட்டியிட்டது. மீண்டும் 20 ஆண்டுகளுக்கு பிறகு 13 தொகுதிகளில் திமுக தற்போது போட்டியிடுகிறது.

கடந்த 1969, 1980, 1990 மற்றும் 1996ல் என இதுவரை 4 முறை திமுக ஆட்சியில் இருந்தது. கடந்த 2001 மற்றும் 2006 சட்டப்பேரவை தேர்தல்களில் திமுகவுக்கு 7 எம்எல்ஏக்கள் இருந்தார்கள். அத்துடன் பிரதான எதிர்க்கட்சியாகவும் திமுக திகழ்ந்தது.

இத்தகைய சூழலில் 2011ல் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 10 இடங்களில் போட்டியிட்டது.என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை பிடித்தபோது திமுகவின் பலம் இரண்டாக குறைந்தது. அதையடுத்து 2016ல் கூடுதலாக இடம் பெற திமுக முனைப்பு காட்டியது. ஆனால் தொகுதி பங்கீட்டில் ஒற்றை இலக்கமாக 9 இடங்களை மட்டும் பிடித்து இரு இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.

அதன்பிறகு இடைத்தேர்தலில் ஒரு இடத்தை வென்று எண்ணிக்கை மூன்று ஆனது. இம்முறை மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பின் 13 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

இதில், வில்லியனூர், மங்களம், பாகூர், ராஜ்பவன், திருபுவனை ஆகிய 5 தொகுதிகளில் என்ஆர்.காங்கிரஸுடன் திமுகவுக்கு போட்டி உள்ளது. அதேபோல் காலாப்பட்டு, நிரவி, நெல்லித்தோப்பு, மண்ணாடிப்பட்டு ஆகிய 4 தொகுதிகளில் பாஜகவுடனும், முதலியார்பேட்டை, உப்பளம், உருளையன்பேட்டை, காரைக் கால் தெற்கு ஆகிய 4 தொகுதிகளில் அதிமுகவுடனும் திமுக மோதுகிறது.

காங்கிரஸூடன் தொடரும் பிணக்கு

கடந்த முறை கூட்டணியில் தங்களுடன் இருந்த ஆளும் கட்சியான காங்கிரஸாரை விமர்சித்து வந்த திமுக, மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் பல தொகுதிகளில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸுக்கு சென்று விட்டதால் தற்போதுள்ள காங்கிரஸ் நிர்வாகிகளுடன் திமுகவினருக்கு ஒருங்கிணைப்பு இல்லை.

திமுக பிரச்சாரக் களத்தில் தனித்து இயங்கி வருகிறது. வாக்கு சேகரிப்பிலும் இணைந்து செயல்படவில்லை. சில இடங்களில் காங்கிரஸாரை திமுகவினர் தவிர்ப்பதும் நடக்கிறது. குறிப்பிட்ட முக்கிய தொகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் மும்முரமாக இருக்கிறது. இதர தொகுதிகளில் இன்னும் விறுவிறுப்பு இல்லை. திமுக தலைவரான ஸ்டாலின் வரும் ஏப்ரல் 3-ம் தேதி புதுச்சேரிக்கு வந்து, குறைந்த நேரமே பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் 13 தொகுதிகளில் திமுக களம் காண்கிறது.

மார்க்சிஸ்ட் இல்லாதது இழப்பு

புதுச்சேரி காங்கிரஸ் - திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூ. தொகுதி கிடைக்காத நிலையில் தனித்து சென்றது, முத்தியால்பேட்டையில் மட்டும் தனித்துப் போட்டியிடுகிறது. இது காங்கிரஸ் மற்றும் திமுகவினருக்கு களப் பணியில் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. காங்கிரஸூடன் அதிருப்தி நிலவும் நிலையில் அவர்கள் இருந்தால் இருதரப்பையும் இணைத்து, களப்பணியில் தீவிரம் காட்டுவார்கள். அதுவும் இல்லாதது, திமுகவை 13 தொகுதிகளிலும் சற்று தளர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. புதுச்சேரியில் உள்ள 13 தொகுதிகளில் திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா வழக்கமாக தான்போட்டியிட்டு வந்த உருளையன்பேட்டை தொகுதியில் இருந்து இடம்மாறி கிராமத் தொகுதியான வில்லியனூரில் போட்டியிடுகிறார்.

அதேபோல் வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், கடந்த முறை வெற்றியை தவற விட்ட ராஜ்பவனிலேயே இம்முறை களம் இறங்குகிறார்.

காரைக்கால் அமைப்பாளர் நாஜிம் குறைவான வாக்குகளில் கடந்த முறை வெற்றி வாய்ப்பு இழந்த காரைக்கால் தெற்கு தொகுதியில் மீண்டும் போட்டி யிடுகிறார்.

மொத்தமுள்ள 13 தொகுதிகளில் காலாப்பட்டு, திருபுவனை, உருளை யன்பேட்டை, முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, நிரவி- திருப் பட்டினம், பாகூர் 7 தொகுதி களில் புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

திமுக தரப்பில் பெண் வேட்பாளர்கள் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x