

புதுச்சேரியில் 87 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (மார்ச் 23) கூறியதாவது:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 1972 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 50 பேருக்கும், காரைக்காலில் 34 பேருக்கும், மாஹேவில் 3 பேருக்கும் என மொத்தம் 87 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.
இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்து 520 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் மருத்துவமனைகளில் 212 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 268 பேரும் என 480 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் காரைக்கால் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த 84 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டு காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 677 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.67 ஆக உள்ளது. இன்று 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 363 (97.14 சதவீதம்) ஆக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 6 லட்சத்து 55 ஆயிரத்து 441 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 6 லட்சத்து 8 ஆயிரத்து 337 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குறைந்து காணப்பட்ட கரோனா தொற்று, கடந்த ஆண்டைப்போலவே, நடப்பாண்டு மார்ச் மாதத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா பரவ முக்கிய காரணம், கரோனா போய்விட்டது என்ற மக்களின் எண்ணத்தினாலும், முகக்கவசம் அணியாமல் செல்வதும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததும் தான். மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர். அரசின் விதிமுறைகளை கடைபிடிப்பதும் இல்லை.
இந்தியாவில் பல மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள கரோனா இரண்டாம் அலையினால் அதிக பாதிப்பும், உயர்சேதமும் ஏற்படும் என்பதை நாம் அறிந்துகொண்டுள்ளோம். கடந்த மார்ச் மாதம் தடுப்பூசி இல்லை. தற்போது தடுப்பூசி போதுமான அளவில் இருக்கிறது. ஆகவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கோவேக்சின், கோவிஷீல்டு இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானது. ஆகவே ஏதேனும் ஒரு தடுப்பூசியை எடுத்துக்கொண்டு 70 முதல் 90 சதவீதம் கரோனாவில் இருந்து காத்துக்கொள்ள முடியும். மீதமுள்ள 10 சதவீதம் முகக்கவசம் அணிவது உள்ளிட்டவைகளால் தடுக்க முடியும். தேர்தல் நேரத்தில் மக்கள் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.’’ இவ்வாறு மோகன்குமார் தெரிவித்தார்.