Published : 23 Mar 2021 09:19 AM
Last Updated : 23 Mar 2021 09:19 AM

அண்ணா மறைவுக்குப் பின்னர் கருணாநிதி எவ்வாறு முதல்வர் ஆனார்?- ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி கேள்வி

அண்ணா மறைவுக்குப் பின்னர் கருணாநிதி எவ்வாறு முதல்வர் ஆனார், அதேபோல, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எங்களது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரும்பான்மையானோர் தேர்ந்தெடுத்ததால் முதல்வர் ஆனேன் என முதல்வர் பழனிசாமி பேசினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு ஓமலூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:

இன்றைக்கு தமிழகம் வெற்றி நடைபோடு தமிழகமாக விளங்கி வருகிறது. அதைக் கேட்டாலே ஸ்டாலின் அலறுகிறார். பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஏழை, எளிய மக்கள் ஏற்றம் பெற திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். புரட்சித்தலைவி ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். அவர்கள் அறிவித்த திட்டங்களை இந்திய நாடே வியந்து பார்த்தது. அதே வழியில் நடைபெறும் அரசும் ஏழை, எளிய மக்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

உங்களைப்போல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்த தேர்தலிலே திமுகவிற்கு தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள். இந்த ஓமலூர் தொகுதி, எப்போதும் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்த தொகுதி. இந்த தொகுதி ஜெயலலிதாவின்கோட்டை.

2011 தேர்தல் அறிக்கையில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கொடுப்போம் என ஜெயலலிதா அறிவித்தார். அதனை முழுமையாக செயல்படுத்தினார். ஆனால் திமுக 2006 தேர்தல் அறிக்கையில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் யாருக்கும் நிலம் வழங்கவில்லை. நிலத்தை வழங்கவில்லை என்றாலும் பரவாயில்லை, மக்களுடைய நிலத்தை அவர்கள் அபகரிக்காமல் இருந்தாலே போதும்.

எங்கேயாவது விலைமதிப்புமிக்க நிலம் இருந்தால் போதும், அது உடனடியாக திமுகவினரால் அபகரிக்கப்பட்டது. அதனால் தான் மாண்புமிகு அம்மா அவர்கள் திமுகவினரால் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு உரியவர்களிடம் சேர்த்தார்கள். திமுக ஆட்சி வந்தால் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து போய்விடும். அதிமுக ஆட்சி, சட்டம் ஒழுங்கு பேணிக்காப்பதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

நீர் மேலாண்மையில் விருது, மின்சாரத்துறையில் விருது, போக்குவரத்துத்துறையில் விருது, உள்ளாட்சி துறையில் விருது, சுகாதாரத்துறையில் விருது என பல்வேறு துறைகளில் விருதுகளைப் பெற்றுள்ளோம். சேலத்தில் ராணுவ உதிரி பாகங்கள்

தயாரிக்கும் தொழிற்சாலை வரவுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கியுள்ளோம். ஜவுளி பூங்கா அமைக்கவுள்ளோம்.

ஸ்டாலின் போகும் இடங்களிலும் திண்ணையில் பெட்ஷீட் விரித்து போட்டு, அமர்ந்து கொண்டு பெட்டியை வைத்து பொதுமக்களிடம் குறை கேட்கின்றாராம். மனுக்களை பெட்டியில் போட்டவுடன் பூட்டி, சீல் வைத்து அவர் எடுத்துச் சென்று விடுவாராம். அவர் முதல்வர் ஆனதும் 100 நாட்களில் பெட்டியை திறந்து குறைகளை தீர்ப்பாராம். எவ்வளவு கதை அளக்கிறார் பாருங்கள். யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? இது நவீன காலம். ஸ்டாலின் அவர்களே, நீங்கள் முதல்வரானால் தானே அந்த பெட்டியை திறக்க முடியும். நீ முதல்வர் ஆகப்போவதும் இல்லை, பெட்டியை திறக்கப் போவதும் இல்லை.

சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சரின் உதவி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தந்து, அதை செயல்படுத்திய அரசும் இந்த அரசு தான். இதன்மூலம் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் தங்கள் செல்போனில் 1100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு குறைகளை சொன்னால், உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இங்கு மனு வாங்குகின்ற வேலையும் இல்லை, பெட்டியில் போடுகின்ற வேலையும் இல்லை, பூட்டுகின்ற வேலையும் இல்லை. மனு வாங்கி மக்களை இனி ஏமாற்ற முடியாது. அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி எவ்வாறு முதல்வர் ஆனார், அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் ஆனார். அதேபோல, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எங்களது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரும்பான்மையானோர் எங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அதனால் முதல்வர் ஆனேன். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.கவை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். மீண்டும் கேட்டையில் வெற்றிக்கொடியை ஏற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x