Published : 22 Mar 2021 06:13 PM
Last Updated : 22 Mar 2021 06:13 PM

தூத்துக்குடி - சாத்தான் குளம்; அதிமுக-பாஜக ஆட்சியின் கொடுமைகள்; மக்கள் மறக்க முடியுமா?-ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி, சாத்தான்குளத்தில் தந்தையும், மகனும் அடித்தே கொல்லப்பட்ட கொடுமை போன்ற பாவங்களைக் கூட்டு சேர்ந்து செய்துவிட்டு, இப்போது கூட்டணியாகக் கைகோர்த்து வாக்குக் கேட்டு வலம் வரும் அதிமுக - பாஜகவினருக்குத் தக்க பாடம் புகட்டுங்கள் என ஸ்டாலின் பேசினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடியில் திமுக, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து பேசியதாவது:

''கோவில்பட்டியில் நம்மை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் எந்தக் காலத்திலும் வெற்றி பெறக்கூடாது என்பது மட்டுமல்ல, அவர் டெபாசிட் தொகை பறிபோகும் அளவிற்கு நம்முடைய வெற்றி அமைய வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதிமுக ஆட்சியின் சாதனைகளை, திட்டங்களைச் சொல்லி முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி மக்களிடத்தில் வாக்கு கேட்க முடியுமா? அந்த யோக்கியதை அவருக்கு இருக்கிறதா? சாதனைகளை அவர்களால் சொல்ல முடியுமா? முடியாது.

வேதனைகளைத்தான் சொல்ல முடியும். அதுவும் எப்படிப்பட்ட வேதனைகள். இதே தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமை. அதை இன்றைக்கு நினைத்தாலும் நெஞ்சு துடிக்கிறது. கண்களில் ரத்தக் கண்ணீர் வருகிறது. 13 பேரைக் காக்கை குருவிகளைப் போல சுட்டுத் தள்ளினார்கள்.

நச்சு ஆலையாக மாறிவிட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் - காந்திய வழியில் - அறவழியில் அந்த வட்டாரத்தில் இருக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். 100 நாட்கள் அந்தப் போராட்டத்தை நடத்தினார்கள். அந்த 100-வது நாளில், 2018 மே மாதம் 22ஆம் தேதி அந்த மக்கள் ஒன்றுசேர்ந்து 100-வது நாளை நினைவுபடுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து மனுக்களைக் கொடுப்பதற்காக அமைதி வழியில் ஊர்வலம் நடத்தினார்கள்.

அப்போது ஆட்சித் தலைவர் முறையாக அலுவலகத்தில் இருந்து அவர்களை உள்ளே அனுமதித்து அந்த மனுக்களை வாங்கியிருந்தால் அப்படிப்பட்ட ஒரு கொடுமையான சம்பவம் நடைபெறுவதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. ஆனால், ஆட்சியர் வெளியூருக்குச் சென்றுவிட்டார். அதைப் பயன்படுத்தி திட்டமிட்டு மத்திய பாஜக அரசும் - மாநில அரசும் சேர்ந்து ஒரு பயங்கரமான துப்பாக்கிச் சூட்டை நடத்தின. அதனுடைய பின்னணி என்ன? பாஜகவும் அதிமுகவும் கூட்டு சேர்ந்து நடத்திய பச்சைப் படுகொலைதான் அது.

ஸ்னோலின் என்ற 17 வயதுப் பெண் நடந்து வரும்போது சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். காளியப்பன் என்ற 22 வயது இளைஞரைச் சுட்ட காட்சியை அருகில் இருந்து சுற்றி வேடிக்கை பார்த்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வந்தன. இப்படி எல்லாம் கொடுமை நடந்தது. இதற்கெல்லாம் அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டதா? இதுவரையில் இல்லை.

தூத்துக்குடி ரஞ்சித்குமார் - சிலோன் காலனி கந்தையா - மாசிலாமணிபுரம் சண்முகம் - தாமோதரன் நகர் மணிராஜ் - திரேஸ்புரம் ஜான்சி - உசிலம்பட்டி ஜெயராமன் - லூர்தம்மாள்புரம் கிளாஸ்டன் - ஒட்டப்பிடாரம் தமிழரசன் - தூத்துக்குடி அந்தோணிராஜ் - தூத்துக்குடி கார்த்திக் தூத்துக்குடி செல்வசேகர் என்று 13 பேரைக் கொலை செய்த கூட்டத்திற்கு இந்தத் தேர்தலில் நாம் பாடம் புகட்ட வேண்டுமா? வேண்டாமா? இப்படிப்பட்ட அக்கிரமத்திற்கு நாம் பதில் தர வேண்டுமா? வேண்டாமா?

இந்தச் செய்தியை சென்னையிலிருந்து நான் கேள்விப்பட்டவுடன் தூத்துக்குடிக்கு நேரடியாக வந்தேன். அப்போது கலவர பூமியாக இருந்தது. அப்படி ஒரு காட்சியை இதுவரை நான் பார்த்ததில்லை. இனிமேலும் பார்க்கக் கூடாது. அதற்குப் பிறகு மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டு காயத்தோடு அனுமதிக்கப்பட்டிருந்த அவர்களைப் பார்த்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் சொன்னேன்.

நான் கேட்கிறேன். இவர்கள் என்ன தவறு செய்தார்கள்? ஊர்வலம் சென்றது தவறா? அமைதியாகப் பேரணியை நடத்தியது தவறா? ஆட்சித் தலைவரைச் சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று எண்ணியது தவறா? எனவே இப்படிப்பட்ட பாவத்தைச் செய்திருக்கும் இந்த ஆட்சிக்கு நாம் பாடம் புகட்ட வேண்டுமா? வேண்டாமா?

அந்த நேரத்தில் முதல்வர் பழனிசாமியைப் பார்த்து தூத்துக்குடியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது பற்றி நிருபர்கள் கேட்கிறார்கள். அதற்கு ‘அப்படியா, அதை நான் தொலைக்காட்சியில்தான் பார்த்தேன்’ என்று சொன்னவர்தான் முதல்வர் பழனிசாமி. இந்தச் செய்தியைக் கூட தெரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்த அவர் முதல்வர் பதவியில் நீடிக்கலாமா?

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு வேலைவாய்ப்பு கொடுத்தார்கள். எப்படிப்பட்ட வேலை என்றால் படித்த பட்டதாரிகளாக இருப்பவர்களுக்குத் தகுதியற்ற வேலைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.

இப்போது நான் சொல்கிறேன். நாம்தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எனவே, அவர்களுக்கு தகுதிக்குரிய வேலை நிச்சயமாக நம்முடைய ஆட்சியில் வழங்கப்படும் என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இதைவிடக் கொடுமை. இந்த வழக்கை முதலில் ஒரு வாரம் சிபிஐ விசாரித்தது. போகப்போக சிபிஐ விசாரணை முறையாக நடக்கவில்லை. அதற்கு என்ன காரணம்? பாஜக தனியார் கம்பெனியின் உறவு வைத்துக்கொண்டு இருக்கிறது. எனவே பாஜக அரசு, சிபிஐயை முடக்கி வைத்துவிட்டது. கண்துடைப்புக்காக பழனிசாமி தலைமையிலான அரசு, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை அமைத்தது. அது அமைக்கப்பட்டு மூன்று வருடம் ஆகிவிட்டது. இதுவரையில் அந்த ஆணையம் அறிக்கை கொடுக்கவில்லை.

எனவே 2 ஆட்சியும் கைகோர்த்துக்கொண்டு இந்த தேர்தலில் வலம் வருகின்றன. அப்படி வலம் வரும் அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டுமா? வேண்டாமா?

அதற்கு அடுத்த கொடுமை சாத்தான்குளம். சாத்தான்குளம் காவல் நிலைய லாக்கப்பில் ஜெயராஜ், பெனிக்ஸ் என்ற அப்பாவையும் மகனையும் அடித்தே கொன்றிருக்கிறார்கள். அந்த பெனிக்ஸினுடைய சகோதரி பேட்டி கொடுக்கிறார். “என் தம்பிக்கு நெஞ்சில் முடியிருக்கும். ஆனால் இப்போது அந்த முடி முழுவதும் பிடுங்கி இருக்கிறார்கள்’’ என்று கதறிக்கொண்டு அந்தச் சகோதரி பேட்டி கொடுத்த காட்சிகள் எல்லாம் சமூக வலைதளங்களில் வந்தன.

அப்படி ஒரு கொடுமை நடந்திருக்கிறது. காவல் துறையிலிருந்து லுங்கி, சட்டையை வாங்கிக் கொடுத்திருக்கிறோம். அதில் அவ்வளவு ரத்தம் என்று ஜெயராஜின் மனைவி கதறும் காட்சிகளை தொலைக்காட்சிகளில், சமூக வலைதளங்களில் பார்த்தோம்.

இந்தச் செய்தியை நான் அறிந்தவுடன், உடனடியாக மாவட்டச் செயலாளர்களிடம் தொலைபேசியில் பேசி, நேரடியாகச் சென்று விசாரியுங்கள் என்று நான் அவர்களை அனுப்பி வைத்தேன்.

அதற்குப் பிறகு அவர்கள் இறந்துவிட்டார்கள் என்ற செய்தி நமக்குக் கிடைத்தது. ஆனால், முதல்வர் பழனிசாமி, “காவல்துறையினர் தாக்கி, லாக்கப்பில் அடித்து அவர்கள் இறக்கவில்லை. அவர்களுக்கு ஏற்கெனவே நோய் இருக்கிறது. மூச்சுத் திணறி இறந்து இருக்கிறார்கள்” என்று சொன்னார்.

அதைவிடக் கொடுமை. காவல்துறையினர் கடையை மூடச் சொன்னார்களாம். அதை மூட முடியாது என்று சொல்லி அப்பாவும், பிள்ளையும் சாலையில் படுத்து உருண்டார்களாம். அதில் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டது என்று எப்.ஐ.ஆர். போட்டிருக்கிறார்கள்.

முதல்வர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்று சொல்ல, அதற்கு ஏற்றாற்போல எஃப்.ஐ.ஆர். தயார் செய்கிறார்கள். சிபிஐ உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் நான் கோரிக்கை வைத்தேன். பின்பு அந்த விசாரணை நடந்தது.

அதேபோல இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒரு பேட்டி கொடுக்கிறார். அதில் “இது லாக்கப் மரணம் அல்ல” என்று அவர் பேட்டி தருகிறார். அவர்கள் மருத்துவமனையில்தான் இருந்தார்கள் என்று பேசியிருக்கிறார்.

ஜெயலலிதாவும் மருத்துவமனையில்தான் இறந்தார். அதற்கு ஏன் விசாரணை கமிஷன் வைத்தீர்கள். எனவே, பழனிசாமியின் இந்த 4 வருட ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இந்த 3 பிரச்சினைகளே போதும் என்று நான் நினைகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x