Last Updated : 22 Mar, 2021 03:13 AM

 

Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM

விருத்தாசலத்தில் விஜயகாந்தின் இடத்தைப் பிடிப்பாரா பிரேமலதா?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2005-ம்ஆண்டு கட்சித் தொடங்கினார். 2006-ம் ஆண்டு தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது ஒருபுறம் பாமக, மறுபுறம் திமுக, மற்றொரு புறம் விடுதலை சிறுத்தைகள் வரிந்து கட்டிக் கொண்டு விஜயகாந்திற்கு எதிராக வேலை பார்க்க அதைத் தாண்டி விஜயகாந்த் வெற்றி பெற்றார்.

அதற்கு முக்கிய காரணம் விஜயகாந்தின் ரசிகர்கள் பட்டாளம். விஜயகாந்திற்கு அதிக ரசிகர்களைக் கொண்ட மாவட்டம் கடலூர். இதனால், அங்கு அவர் வெற்றி பெற முடிந்தது. அப்போது அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு உறுதுணையாக அவரது மனைவி பிரேமலாதவும் பக்கபலமாக இருந்து, கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் விருத்தாசலம் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க தனது சொந்த செலவில் குடிநீர் லாரிகள் மூலம் கிராமம் கிராமமாக குடிநீர் விநியோகம் செய்தது, தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்புத் தினமாக அறிவித்து, பிறந்தநாளை விருத்தாசலத்தில் தொகுதிவாசிகள் முன்னிலையில் கொண்டாடி நலத் திட்ட உதவிகள் வழங்கியது போன்ற செயல்பாடுகளால் தொகுதி மக்களின் அபிமானத்தை விஜயகாந்த் பெற்றிருந்தார். அதனால், 2011-ம் ஆண்டு விருத்தாசலம் தொகுதியில் தனது கட்சியைச் சேர்ந்த முத்துக்குமாரை களமிறக்கி அவரை வெற்றி பெறச் செய்தார்.

தற்போது உடல் நலக் குறைவால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழலில் விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதாவை இத்தொகுதியில் களம் காண வைத்திருக்கிறார்.

இம்முறை அமமுகவுடன் கைகோர்த்திருக்கிறது தேமுதிக. விருத்தாசலம் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன், அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் கார்த்திக்கேயன், அமமுக கூட்டணியில் பிரேமலதா, மக்கள் நீதிமய்யம் கூட்டணியில் ஐஜேகே வேட்பாளர் பார்த்தசாரதி, நாம் தமிழர் கட்சியில் கே.அமுதா ஆகியோர் களம் காண்கின்றனர். களம் சற்று கனமாகவே இருக்கிறது.

கடும் போட்டிகள் இருப்பதால் வாக்குகள் சிதறக் கூடும் என்றே தெரிகிறது. சிதறும் வாக்குகளுக்கு மத்தியில் விஜயகாந்தின் நட்சத்திர அந்தஸ்து தனக்கு வெற்றியைத் தேடித் தரும் என்று பிரேமலதா நம்புகிறார்.

“அதிருப்தி அதிமுகவினர் வாக்குகள் கிடைக்கும், 2006-ல் விஜயகாந்த்துக்கு தொகுதி வாசிகள் அளித்த அதே ஆதரவும் தற்போதும் கிடைக்கும்” என்று தேமுதிகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x