Published : 06 Nov 2015 07:55 AM
Last Updated : 06 Nov 2015 07:55 AM

காங்கிரஸ் தலைமைக்கு விசுவாசமாக இளங்கோவன் செயல்படவில்லை: முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு குற்றச்சாட்டு

கட்சித் தலைமைக்கு விசுவாசமாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நடந்து கொள்ளவில்லை என அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறிய தாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் செயல்பாடுகள் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியை பாதிக்கும் என்பதால் ப.சிதம்பரம், குமரிஅனந்தன், எம்.கிருஷ்ணசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் டெல்லி சென்று சோனியா, ராகுலை சந்தித்து எங்களது கவலையை தெரிவித்தோம். சோனியாவும், ராகுலும் எங்களை கடிந்துகொண்டனர் என்ற செய்தி முற்றிலும் தவறானது.

தமிழக அரசால் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் கோவன், சோனியா, ராகுல், மன்மோகன் சிங் ஆகியோரை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சித்து வருபவர். காங்கிரஸுக்கு பாடை கட்ட வேண்டும் என பாடல்கள் பாடியவர். ஆனால், அவருக்கு இளங்கோவன் வெண் சாமரம் வீசுகிறார். அவருக்காக போராட்டம் நடத்துகிறார். தன்மான முள்ள காங்கிரஸ்காரர்கள் யாராலும் இதை ஏற்க முடியாது.

கோவனை ஆதரிப்பதன் மூலம் காங்கிரஸ் தலைமைக்கு விசுவாச மாக இளங்கோவன் நடந்து கொள்ளவில்லை. இதைத்தான் ஒழுக்கம், நேர்மையற்ற செயல் என விமர்சித்தேன். தனிப்பட்ட முறையில் அவரின் ஒழுக்கம் பற்றி எதுவும் கூறவில்லை.

பொறியியல் கல்லூரி, தொலைக் காட்சி சேனல் என சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக தனிப்பட்ட முறையில் என் மீது இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். எனது சொத்து கள் அனைத்தும் 50 ஆண்டுகால உழைப்பால் வந்தவை. புறம்போக்கு நிலத்தை நான் ஆக்கிரமித்திருந்தால் அதை எப்போது வேண்டுமானாலும் அரசு எடுத்துக் கொள்ளலாம்.

விமர்சிக்க மாட்டேன்

இன்று காலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் என்னிடம் பேசினார். கட்சித் தலைமைக்கு கட்டுப்படும் தொண்டன் என்பதால் இளங்கோவனை விமர்சிக்க மாட்டேன். ஆனால், தனிப்பட்ட முறையில் எனக்கு விடுத்த சவாலை ஏற்று அவருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு தங்கபாலு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x