Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 03:14 AM

சினிமா செல்வாக்கு நிச்சயமாக வாக்குகளாக மாறாது: ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு சிறப்புப் பேட்டி

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு அப்பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். மூச்சு விடக்கூட நேரமில்லை என்ற கூறிய அவர், பிரச்சாரத்துக்கிடையே 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு பிரத்தேகமாக அளித்த பேட்டி:

2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தது?

மிகவும் கவலைக்கு உரியதாகவே இருக்கிறது. வாக்கு சேகரிக்கும்போது மட்டும்தான் வருகிறீர்கள். பின்னர், ஆளையே காணவில்லை. ஏன் தான் திமுகவுக்கு வாக்கு அளித்தோம் என்று மக்கள் மிகவும் வேதனைப் படுகிறார்கள்.

அப்படியென்றால் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற கு.க.செல்வத்தின் செயல்பாடுகளும் அப்படிதான் இருக்கிறதா? (கு.க.செல்வம் தற்போது பாஜகவில் உள்ளார்)

ஆயிரம் விளக்கில் கு.க.செல்வம் வெற்றி பெற்றிருந்தாலும் திமுக ஆட்சிக்கு வரவில்லை. கு.க.செல்வம் மட்டுமே இந்த தொகுதிக்கு ஒன்றும் செய்து விட முடியாது. திமுக இந்த தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்றுதான் அதனை எடுத்துக் கொள்ளவேண்டும்.

குடிசை பகுதி, அடுக்கு மாடி குடியிருப்பு எனப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட ஆயிரம் விளக்குக்காக என்ன திட்டம் கைவசம் வைத்துள்ளீர்கள்?

அதனை எல்லாம் பொதுவெளியில் சொல்ல முடியாது. நான் வெற்றி பெற்ற பின்னர், இந்த தொகுதியின் முன்னேற்றத்தை அனைவரும் நேரில் பார்க்கலாம்.

திமுக வேட்பாளர் டாக்டர் நா.எழிலன் உங்களுக்குச் சவாலாக இருக்கிறாரா?

நான் திமுகவில் இருந்தபோதுக்கூட எழிலனை எனக்குத் தெரியாது. அதனால், அவரை பற்றிய விமர்சனம் செய்ய விரும்பவில்லை. சவால் என்று எனக்கு எதுவுமில்லை.

பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சொல்கிறாரே?

அரசு கொண்டு வரும் எல்லா திட்டத்தை எதிர்ப்பதுதான் இங்கே எதிர்க்கட்சியின் ஒரே வேலையாக இருக்கிறது. தமிழகத்தில் பாஜக ஏற்கெனவே காலூன்றி விட்டது.

தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளது. தொகுதி முழுவதும் பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரித்துவிட முடியுமா?

நிச்சயமாக முடியும். அதிமுக அரசின் சாதனைகள் மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதனை நினைவுபடுத்தினாலே போதும், எங்கள் கூட்டணி வெற்றி பெற்றுவிடும். அதற்குக் குறைவான நேரம் இருந்தாலே போதுமானது.

கட்சியைத் தாண்டி ஆயிரம் விளக்கு மக்கள் குஷ்புவுக்கு ஏன் வாக்களிக்கவேண்டும்?

குஷ்பு என்ற தனிநபராக நான் இங்கு வரவில்லை. பாஜக என்ற மிகப்பெரிய கட்சியின் பிரதிநிதியாகத் தான் வந்திருக்கிறேன். இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் செய்யாததை பாஜக செய்து வருகிறது.குறிப்பாகப் பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், அவர்களுக்கு அதிகாரம் வழங்கவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி ராணி, மேனகா காந்தி, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமான பெண்களுக்கு நாட்டின் உயர்மட்ட அதிகாரம் வழங்கி பாஜக அழகு பார்க்கிறது. அந்த கட்சியின் பெண் பிரதிநிதியான எனக்கு ஆயிரம்விளக்கு மக்கள் வாக்களித்து சட்டப்பேரவைக்கு அனுப்பினால், அவர்களின் முன்னேற்றத்துக்காக நானும் பாஜகவும் இணைந்து பாடுபடுவோம்.

உங்களின் சினிமா செல்வாக்கு வாக்குகளாக மாறுமா?

நிச்சயமாக வாக்குகளாக மாறாது. சினிமா வேறு அரசியல் வேறு. இரண்டையும் இணைக்க முடியாது, கூடாது. இங்கு என்னை யாரும் நடிகையாகப் பார்க்கவில்லை. குஷ்பு வெற்றி பெற்றால் நம் தொகுதிக்கு என்ன செய்வார் என்றுதான் மக்கள் யோசிக்கிறார்கள். பெண் வாக்காளர்களுக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறது.

ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உடனடி தேவை என்ன?

சுகாதாரம்தான் முதல் தேவை. குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, கழிவு நீர் தேங்க விடாமல் சுகாதார பகுதியாக்க வேண்டும் என்று ஆயிரம் விளக்கு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நான் வெற்றி பெற்றால், முதல் நாளிலே இவை அனைத்தையும் செய்து முடித்து விடுவேன்.

பிரச்சாரத்தின்போது ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கிறது என அடிக்கடி கூறுகிறீர்களே, அவரிடம் பேசினீர்களா?

நான் அவரிடம் எதுவும் பேசவில்லை. ஆனால், ரஜினின் ஆதரவு எனக்கு இருக்கு என்பது மட்டும் நன்றாக தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x