Published : 21 Mar 2021 03:16 AM
Last Updated : 21 Mar 2021 03:16 AM

தொழிற்சாலைகள் இல்லாததால் பிழைப்புத் தேடி வெளியூர்களுக்கு இடம்பெயரும் விளாத்திகுளம் மக்கள்: 74 ஆண்டுகளாக கவனிக்கப்படாத கடைக்கோடி தொகுதி

தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடி யில் பின் தங்கிய பகுதியாக விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி உள்ளது. விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி புறவழிச்சாலை, வேப்பலோடை, வேம்பார்அருகே கன்னிராஜபுரம், கோவில்பட்டி திட்டங்குளத்தை அடுத்த சிதம்பராபுரம் என பரந்து விரிந்து காணப்படும் இத்தொகுதியில் 80 சதவீதம் கிராமப்புறங்களாக உள்ளன.

விளாத்திகுளம் தொகுதி கோவில்பட்டி, கயத்தாறு, புதூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியது. விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரம் ஆகிய 2 வட்டங்கள் உள்ளன.

இந்த தொகுதியில், மானாவாரி, தோட்டப்பாசனம், வைப்பாற்று பாசனம் என 3 வகையான விவசாயமும், மீன் பிடித்தொழில், உப்பளம், கரிமூட்டம் ஆகியதொழில்களும் உள்ளன.

இங்குள்ள மானாவாரி நிலங்களில் சிறுதானியப் பயிர்கள், வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி அதிகம் பயிர் செய்யப்படுகின்றன. கால்நடை வளர்ப்பு தொழிலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தொழில் வாய்ப்பில்லை

மழை பெய்தால் மட்டுமே விவசாயம். மழையில்லையென்றால் வறட்சி தாண்டவமாடும். சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகளை தொட்டும், இந்த தொகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. விவசாயத்துக்கு மாற்றாக கருதப்படும் கரிமூட்டத் தொழிலும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால், இப்பகுதி மக்கள் வேலை வாய்ப்பை தேடி திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர்

இத்தொகுதியில் 3 பேரூராட்சிகள் தவிர மற்றவை கிராம ஊராட்சிகள். இங்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதுவும் முழுமையாக வருவதில்லை என்று மக்கள் ஆதங்கப்படுகின்றனர். குடிநீருக்காக பெரும்பாலான கிராமங்கள் கண்மாய் மற்றும் கிணறுகளை நம்பியே உள்ளன.

சாலைகளை மேம்படுத்த வேண்டும்

புதூர் பேரூராட்சி பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கிராமப்புறச் சாலைகள் மட்டுமின்றி மேலக்கரந்தை வழியாகச் செல்லும் நான்கு வழிச்சாலையும் மோசமாக உள்ளது.

தூண்டில் வளைவு பிரச்சினை

வேம்பார் முதல் வேப்பலோடை வரை உப்பளத் தொழில் நடைபெறுகிறது. உள்ளூர் உப்பு தயாரிப்பை மேம்படுத்த அரசு உதவிக்கரம் நீட்டாததால் அத்தொழிலும் நசிந்து வருகிறது.

வேம்பார், கீழவைப்பார், சிப்பிகுளம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பால் படகுகள் சேதமடைந்து வருகின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலத்தை சரியாக அமைக்க வேண்டும் என்ற மீனவர்களின் நீண்ட கால கோரிக்கை செவிமடுக்கப்படவில்லை.

புதூர், எட்டயபுரத்தில் நெசவுத் தொழில் மிகவும் நலிந்த நிலையில் உள்ளது. நெசவுத் தொழிலாளர்களுக்கு சோலார் மின் வசதியுடன் கூடிய குடியிருப்புகள் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

பகுதி வாரியாக குளிர்பதன கிடங்குகள்

புதூர், விளாத்திகுளம், எட்டயபுரம் ஆகிய ஊர்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் குளிர்பதன கிட்டங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த கிட்டங்கிகளால் சிறு விவசாயிகளுக்கு பலன் இல்லை என்றே கூறப்படுகிறது.

குளத்தூர், சூரங்குடி என பகுதி வாரியாக கிட்டங்கிகள் அமைத்தால், விவசாயிகளுக்கு அலைச்சல் குறையும். ஏற்கெனவே உள்ள கிட்டங்கிகளுக்கும் போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

கரோனா ஊரடங்கால் ஏராளமானோர் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர். நல்ல விலை கிடைக்கும் என விளை பொருட்களை சேமித்த விவசாயிகளுக்கு சோகமே மிஞ்சியது. அதே போல், நடப்பாண்டு ராபி பருவத்தில் தொடர் மழையால் நஷ்டமடைந்தனர். அரசு சார்பில் நிவாரணமும், விவசாய கடன் தள்ளுபடியும் வழங்கப்பட்டதால், ஓரளவு நம்பிக்கையுடன் மீண்டும் பணிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், உரம், விதைகள் விலை யேற்றம் விவசாயிகள் மத்தியில் கலக் கத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x