Published : 19 Mar 2021 03:15 AM
Last Updated : 19 Mar 2021 03:15 AM

தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற வேண்டும்: சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் வலியுறுத்தல்

தாம்பரம்

தாம்பரம் மற்றும் பல்லாவரம் நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், குடியிருப்போர் நல சங்கத்தினர் விரும்புகின்றனர். ஆனால், இதற்கு கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

தாம்பரம், பல்லாவரம் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சி ஆகவேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்காக சமூக ஆர்வலர்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், இதற்கு நேர்மாறாக அரசியல் கட்சியினர் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மாநகராட்சி ஆகும் பட்சத்தில் அனைத்து வசதிகளும், அனைத்து பகுதிகளுக்கும் சரிசமமாக கிடைக்கும் என குடியிருப்போர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால், மாநகராட்சியாக மாற்றப்பட்டால் கவுன்சிலர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால், ஏராளமான கட்சியினருக்கு கவுன்சிலர் பதவி கிடைக்காமல் போகும் என்பதால் இந்த திட்டத்துக்கு அரசியல் கட்சியினர் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து குரோம்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்தானம் கூறியதாவது: வளர்ந்த நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும். வளர்ந்த பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சமச்சீராக கிடைக்கும். பல ஆண்டுகளாக இந்த கோரிக்கை இருந்து வருகிறது.

தேர்தலிலும் அரசியல் கட்சியினர் வரும்போது நாங்கள் இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம். செய்வதாக உறுதி அளிக்கின்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின் செய்வதில்லை. மக்களை கவர்வதற்காக மட்டும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநகராட்சி ஆக்குவோம், உள்ளாட்சிகள் தரம் உயர்த்தப்படும் என தெரிவிக்கின்றனர்.

ஆனால், அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியினருக்கு பதவி கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக திட்டத்தை நடைமுறைப் படுத்தாமல் காலதாமதம் செய்து வருகின்றனர். இது கண்டனத்துக்குரியது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இவற்றை செய்யும் கட்சியிருக்கே நாங்கள் ஆதரவளிக்க திட்டமிட்டிருக்கிறோம். இதற்காக பல்வேறு இடங்களில் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக, திமுக கட்சியினர் சிலர் கூறியதாவது: தற்போது உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது மாநகராட்சியாக மாற்றப்பட்டால் வார்டுகள் குறைக்கப்படும். தற்போது, தாம்பரம் நகராட்சியில் 33 வார்டுகள். பல்லாவரத்தில் 42 வார்டுகள் உள்ளன.

மாநகராட்சியாக மாற்றப்பட்டால் 10,000 வாக்காளர்களுக்கு ஒரு வார்டு என்று பிரிக்கும்போது குறைவான அளவே கவுன்சிலர் பதவி கிடைக்கும். இதனால் எங்களுக்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற விருப்பமில்லை என்றனர்.

இதேபோல் செங்கல்பட்டு நகராட்சியை அருகிலுள்ள ஊராட்சிகளை இணைத்து பெருநகராட்சியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் பல நாட்களாகவே உள்ளது. இதற்கும் அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு நகராட்சி போதிய வருவாய் இன்றி வளர்ச்சி அடையாமல் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

எனவே, கட்சிகள் மக்களின் வளர்ச்சியை உணர்ந்து செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x