Published : 18 Mar 2021 12:56 PM
Last Updated : 18 Mar 2021 12:56 PM

ஆட்சியை கலைக்க ஸ்டாலின் திட்டம் தீட்டினார்; தொண்டர்கள் ஆதரவுடன் முறியடித்தோம்: முதல்வர் பழனிசாமி பேச்சு

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

திருவாரூர்

தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது உறுதி என, தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிமுக வேட்பாளர் சி.எஸ்.சுரேஷ்குமாரை ஆதரித்து இன்று (மார்ச் 18) முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

"தமிழக முதல்வராக கருணாநிதியும், துணைமுதல்வராக ஸ்டாலினும் இருந்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கினர். இதனால் இப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனர். அதனை தடுத்து ஜெயலலிதா பாதுகாத்தார். அவரது வழியில் நடைபெற்று வரும் எனது தலைமையிலான ஆட்சியில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா மாவட்டத்தை அறிவித்து விவசாயிகளை பாதுகாத்துள்ளோம். 50 ஆண்டுகால காவிரி உரிமை பிரச்சினைக்கு நீதிமன்றத்தின் வாயிலாக தீர்வை பெற்றுத் தந்துள்ளோம்.

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு மூலம் தமிழகம் முழுவதும் ரூ.9,300 கோடி இழப்பீடு தொகையை பெற்றுத் தந்த அரசு ஜெயலலிதா அரசு. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் புரவி புயல், நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1,700 கோடி நிவாரணம் வழங்கியுள்ளோம். விவசாயிகள் படும் துன்பத்தை நான் ஒரு விவசாயி என்பதால் அனுபவரீதியாக உணர்ந்தவன்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் கடன் தள்ளுபடி செய்வதாக ஏமாற்றியுள்ளனர்.

நாடு சிறக்க வேண்டுமெனில் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் நூற்றுக்கு 34 பேர் உயர்கல்வி படித்த நிலையில், அதிமுக ஆட்சியில் நூற்றுக்கு 49 பேர் படித்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. திருத்துறைப்பூண்டி உட்பட பல்வேறு பகுதிகளில் அதிகளவிலான கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. வேளாண், பொறியியல், மருத்துவ கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவிலேயே கல்வியில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கின்றது.

கடந்த 2006 - 11 ஆட்சி காலத்தில் மின் தடை அதிகமாக இருந்தது. இதன் காரணமாகவே, ஆட்சி பறிபோய்விடும் என்பதை அப்போதைய மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அந்த அளவுக்கு திறனற்ற நிலையில் ஆட்சி நடத்தியவர்கள் திமுக. அதன்பின்னர், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 3 மாதத்திலேயே தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்து செயல்படுத்திக் காட்டினார். அவரது வழியில் நடைபெற்று வருகின்ற இந்த ஆட்சியில் மின் மிகை மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது.

தடையில்லா மின்சாரம் கிடைப்பதால் புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தை நோக்கி வரும் நிலை உருவாகியுள்ளது. 3 லட்சத்து 500 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்துள்ளோம். இதன்மூலம், நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 5 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும், தொழில் முனைவோர் மாநாட்டின் மூலம் ரூ.28 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 73 தொழில்களை தொடங்க தொழில் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இப்படி தமிழகம் சரியாக திசையை நோக்கி பயணித்து வருகின்றது. நான் முதல்வராகப் பதவியேற்று 4 வருடம் 2 மாதம் ஆகின்றது. அப்போது, நான் நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்காக நிறைவேற்றியுள்ளேன். ஆனால், இந்த காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியை கலைக்கவும், கட்சியை உடைக்கவும் ஸ்டாலின் திட்டம் தீட்டினார். அந்த திட்டம் தொண்டர்களின் ஆதரவோடு முறியடிக்கப்பட்டது.

கடந்த திமுக ஆட்சியின்போது இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்பதாக திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள். கொடுக்கவில்லை. மாறாக, திமுகவினர் நிலத்தை பிடுங்காமல் இருந்தாலே போதும் என்றநிலைதான் இருந்தது என்பதை யாரும் மறந்துவிடவில்லை.

விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களை தமிழகத்தின் சார்பில் அமைச்சர்கள் சந்தித்து ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இத்திட்டத்துக்கு இரண்டு மாநில முதல்வர்களும் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும்.

திருத்துறைப்பூண்டியில் மணலி கந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படும். முத்துப்பேட்டை தனி வட்டமாக உருவாக்கப்படும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x