Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM

அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு; தமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க திட்டமா?- தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தேர்தல் தள்ளிவைக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம்தொகுதியில் வேட்பாளர் பணம்கொடுத்தது தொடர்பாக மாவட்டதேர்தல் அதிகாரியிடம் விளக்கம்கோரப்பட்டுள்ளது. தபால் வாக்கு வசதியைப் பெற விண்ணப்பிப் பதற்கான காலஅவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இனி, தபால் வாக்குக்கு யாரும் விண்ணப்பம் செய்ய முடியாது.

பிஹார் மாநிலத்தில் கரோனா காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டதால், அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளோம். அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்தோம். தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தேர்தல் நடத்தப்படுமா என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்குறித்து கேட்கிறீர்கள். இப்போதுபிஹார் மாநில அதிகாரிகள் நம்முடன் உள்ளனர். அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தும்போது, அங்கு நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் பேருக்கு தொற்று பதிவானது. அதிக அளவு தொற்றுக்கு இடையிலும் பேரவைத் தேர்தலை அவர்கள் நடத்தி முடித்துள்ளனர்.

ஆனால், தமிழகத்தில் தற்போது 800 என்ற அளவில்தான் தொற்று பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் தலைமைச் செயலரும் ஆய்வு நடத்தியுள்ளார். எனவே, தேர்தல் நடக்குமா, நடக்காதா என்பது குறித்த தகவல் ஏதும் தற்போது வரை வரவில்லை. இருப்பினும், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அங்குள்ள நிலைமை குறித்து அறிவிக்கும் பட்சத்தில், அதற்கான வழிமுறைகள் பின்பற்றப்படும். சுகாதாரத் துறையினருடன் இணைந்து நாங்கள் தினமும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

கரோனா காரணமாக, அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த தனியாக இடம் தேர்வு செய்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிக்க வேண்டும். சுகாதாரத் துறை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதுதவிர, வாக்காளர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.

வாக்காளர்களுக்கு கையுறை மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு உடல்கவசம் வழங்கப்படும். இவற்றை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் வாங்க உள்ளோம்.

தேர்தல் நடத்தை விதிமீறலைப் பொறுத்தவரை புகார்களின் தன்மைக்கு ஏற்றவாறு தமிழக தேர்தல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது குறித்துஇதுவரை 51 புகார்கள் பெறப்பட்டதில், 31 புகார்கள் தவறானவை. சரியான 20 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சி-விஜில் செயலி வழியாக இதுவரை 1,291 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக கரூரில் 315 புகார்கள் வந்துள்ளன. சமூக வலைதளங்களில் வரும் பிரச்சாரங்கள் மீது புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. அனுமதியின்றி சுவர்களில் விளம்பரம் செய்தல், மத ரீதியாக உணர்வுகளைத் தூண்டி பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x