Published : 17 Mar 2021 03:58 PM
Last Updated : 17 Mar 2021 03:58 PM

அதிமுக வெற்றி பெற்றாலும் அவர்கள் பாஜக உறுப்பினர்கள்தான்: ஸ்டாலின் பேச்சு

அதிமுக வெற்றி பெறுவதும் பாஜக வெற்றி பெறுவதும் ஒன்றுதான்; அதிமுக வெற்றி பெற்றாலும் அவர்கள் பாஜக உறுப்பினர்கள்தான் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 17), தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்போது, மதுரை - பழங்காநத்ததில் பொதுமக்களிடையே பேசியதாவது:

"வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் ஆதரவு தந்து சிறப்பான வெற்றியை தேடித் தரவேண்டும் என்று கேட்பதற்காக உங்களைத் தேடி, நாடி வந்திருக்கிறேன்.

உங்களிடத்தில் உரிமையோடு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். உரிமையோடு என்றால் தேர்தலுக்காக மட்டும் வருகிறவன் இந்த ஸ்டாலின் அல்ல, எப்பொழுதும், எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் வருகிறவன். இப்போது நான் முதல்வர் வேட்பாளராக வந்திருக்கிறேன். அதுதான் முக்கியம். எனவேதான் அந்த உரிமையோடு உங்களிடத்தில் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்.

நீங்கள் தயவுசெய்து ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். அதிமுக வெற்றி பெறுவதும் பாஜக வெற்றி பெறுவதும் ஒன்றுதான். பாஜக உறுப்பினராக வரவேண்டும் என்ற அவசியம் இல்லை; அதிமுக வெற்றி பெற்றாலும் அவர்கள் பாஜக உறுப்பினர் தான்.

ஏற்கெனவே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் 38 இடங்களில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றோம். அதில், தேனி தொகுதியில் அதிமுக எம்.பி. ஒருவர் வெற்றி பெற்றார். அவர் அதிமுக எம்.பி. அல்ல; பாஜக எம்.பி.யாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

எனவே, அதிமுக வெற்றி பெறக் கூடாது. பாஜகவும் வெற்றி பெறக்கூடாது. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, ஒரு பாஜக எம்எல்ஏ வந்தாலும் அது எந்த அளவுக்கு நாட்டுக்குக் கெடுதல் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

தமிழ்நாட்டில் இப்போது பாஜகவின் ஒரு உறுப்பினர் கூட இல்லாமல், சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் இன்றைக்கு அதிமுகவின் ஆட்சி நடைபெற்றாலும், தமிழ்நாட்டில் இப்போது பாஜக ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது.

முதல்வர் பழனிசாமி, தமிழ்நாட்டை இன்றைக்கு அடமானம் வைத்து இருக்கிறார். நம்முடைய உரிமைகளை எல்லாம் ஒவ்வொன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது.

காவிரியின் உரிமையை நிலைநாட்ட முடியவில்லை. நீட் தேர்வைத் தடுக்க முடியவில்லை. ஜிஎஸ்டி வரியைக் குறைக்க முடியவில்லை. தமிழ்நாட்டுக்கு வந்து சேர வேண்டிய நிதியை முறையாகப் பெற முடியவில்லை.

மதுரையில் எய்ம்ஸ் திட்டத்தை அறிவித்தார்கள். 2014-ம் ஆண்டு டெல்லி நாடாளுமன்றத்தில் அறிவித்தது. அதற்குப் பிறகு அது கிடப்பில் போடப்பட்டிருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமராக இருக்கும் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக வருவதற்கு முன்பு அதற்கு அடிக்கல் நாட்டினார்.

2014-ல் அறிவித்த திட்டத்திற்கு, 2019-ல் அடிக்கல் நாட்டினார். இப்போது 2021 வந்துவிட்டது. இதுவரையில் ஒரு செங்கல் கூட வைக்கப்படவில்லை. அந்த திட்டம் இப்போது அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

ஆனால், நான் இப்போது சொல்கிறேன். எந்த திட்டம் கிடப்பில் இருந்தாலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதை விரிவுபடுத்தி, அந்த எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக உருவாக்கித் தருவோம். நாங்கள் அதில் அரசியல் நோக்கம் பார்க்க மாட்டோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல, உள்ளாட்சித் தேர்தலை முறையாக இந்த ஆட்சி நடத்தவில்லை. அதற்குப் பிறகு நாம் நடத்த வேண்டும் என்று சொல்லி நீதிமன்றம் சென்று ஒரு சில மாவட்ட ஊராட்சி பகுதிகளில் மட்டும் தான் நடைபெற்றது.

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் நடக்கவில்லை. எனவே, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடக்காமல் இருக்கும் அந்த உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்துவோம் என்ற உறுதிமொழியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x