Published : 17 Mar 2021 12:51 PM
Last Updated : 17 Mar 2021 12:51 PM

7 மாவட்டங்களில் சவாலாக உள்ள கரோனா தொற்று; தடுப்பூசி முக்கியமான ஆயுதம்- ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருவதாகவும், இதை எதிர்க்கத் தடுப்பூசி மிக முக்கியமான ஆயுதம் எனவும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

''இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னையில் தொற்று அதிகரிப்பதைக் காண முடிகிறது. அதற்கு அடுத்தபடியாகக் கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் நமக்குச் சவாலாக இருக்கின்றன. அதே நேரத்தில் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சென்னையைப் பொறுத்தவரை தேனாம்பேட்டை, அண்ணா நகர், அம்பத்தூர், வளசரவாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் தொற்று அதிகமாக உள்ளது.

மக்கள் அலுவலகங்களுக்குள் செல்லும்போது கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டு, உடல் வெப்பநிலை கண்காணிக்கப்பட வேண்டும். அடிக்கடி கை கழுவ வேண்டும். ஆனால், இதில் சுணக்கம் நிலவுகிறது. ஏற்கெனவே மைலாப்பூரில் ஒரு வங்கி, வில்லிவாக்கத்தில் ஒரு விடுதியில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முன்னதாக டிசம்பர் மாதத்தில் சென்னை கல்லூரி விடுதியொன்றில் பாதிப்பு ஏற்பட்டது.

மக்களுக்கு வேண்டுகோள்

பொதுமக்களின் ஒத்துழைப்பால்தான் டெங்கு நோயைக் குறைத்தோம். கரோனா நோயை ஒழிக்கவும் மக்கள் அதே ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். முகக்கவசம் அணியாத 14 லட்சம் மக்களிடம் இருந்து 15 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது எங்களின் நோக்கமில்லை. ஆனால், அதைச் செய்தால்தான் மக்கள் முகக்கவசம் அணிகிறார்கள். கடந்த 3 நாட்களில் முகக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தடுப்பூசி முக்கியமான ஆயுதம்

தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஒரு நாளுக்கு 5 ஆயிரம், 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு வந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

யார், யாருக்கெல்லாம் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறதோ அனைவரும் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அரசே இலவசமாகத் தடுப்பூசியை விநியோகிக்கிறது. சந்தைகளில் பணியாற்றுவோர், ஆட்டோ, பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிட்ட பொது வாழ்க்கையில் உள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

60 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி என்பதை 50 வயதுக்குக் குறைவானோருக்கு என்று மாற்றவும் இணை நோய்கள் உள்ள எந்த வயதினர் வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிடவும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போது 20 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இன்னும் தடுப்பூசிகள் வரும். வாய்ப்புள்ளவர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத நிலை இருக்கக் கூடாது.

தடுப்பூசி மிக முக்கியமான ஆயுதம். யாருக்கெல்லாம் தடுப்பூசிக்கான வாய்ப்பு, அனுமதி உள்ளதோ அவர்கள் விரைந்து தடுப்பூசி போட்டுக் கொள்வது அவர்களுக்கு நல்லது''.

இவ்வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x