Published : 17 Mar 2021 03:15 AM
Last Updated : 17 Mar 2021 03:15 AM

தாமிரபரணி - வைப்பாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவேன்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வாக்குறுதி

தாமிரபரணி- வைப்பாறு இணைப்புத் திட்டத்தை செயல் படுத்துவேன் என்று ராஜபாளையம் அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி அளித்தார்.

ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த 3 நாட்களாக வாக்கு சேகரித்தார். இந்நிலையில் ராஜபாளையத்தில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு தலைமை வகித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும். ஆண்ட கட்சியே 3-வது முறையாக ஆள வேண்டும் என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும் முதல்வர் பழனிசாமி ஆட்சி பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி முன்னிலையில் உள்ளது. மிகப் பெரிய மக்கள் செல்வாக்கு உள்ள கூட்டணியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி அமைந்துள்ளது.

ஸ்டாலின் நாட்டை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார். 2006-ல் அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம் தருவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறினார். ஒருவருக்குக்கூட ஒரு ஏக்கர் நிலம்கூட கொடுக்கவில்லை.

விருதுநகர் மாவட்டத்தில் 68 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வாங்கிக் கொடுத்துள்ளேன். ராஜபாளை யத்தில் அனைத்து சாலைகளும் புதிதாகப் போடப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன.

கொண்டா நகரம் கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம், சத்திரபட்டி ரயில்வே மேம்பாலம், தொகுதி முழுவதும் 13 மினி கிளினிக் என்று பல்வேறு திட்டப் பணிகளை நான் அமைச்சராக இருந்தபோது ராஜபாளையம் தொகுதியில் செய்து கொடுத்துள்ளேன்.

இப்பகுதிக்குத் தேவையான நல்ல பல திட்டங்களை நான் நிச்சயமாகக் கொண்டு வருவேன். தாமிரபரணி-வைப்பாறு இணைப்புத் திட்டத்தை செய்து கொடுங்கள் என்று முதல்வரிடம் நான் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த நதிகள் இணைப்புத் திட்டம் நிறைவேறினால் ராஜபாளையம், வில்லிபுத்தூர், சாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிகள் வளம் பெறும். இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x