Last Updated : 13 Nov, 2015 01:06 PM

 

Published : 13 Nov 2015 01:06 PM
Last Updated : 13 Nov 2015 01:06 PM

கடலூர்: முழுமையான வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கக் கோரி, பெரிய காட்டுப்பாளையம் கிராம மக்கள் அனைவரும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் காற்றுடன் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி கடலூர் மாவட்டத்தில் 32 பேர் இறந்துள்ளனர்.

இதில் பண்ருட்டியை அடுத்த பெரியக்காட்டுப்பாளையம் மற்றும் விசூர், செம்மேடு உள்ளிட்டப் பகுதிகளில் மட்டும் 11 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து பெரியக்காட்டுப்பாளயம், விசூர், செம்மேடு ஆகிய கிராமங்களில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் உள்ளவர்களுக்கு அரசின் நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பெரியக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு, கிராமம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் வழங்குவதேன் என வருவாய் துறையினரிடம் கேள்வி எழுப்பினர் .

இதையடுத்து இன்று காலை பெரியக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கிராம மக்கள் நிவாரண முகாமை முற்றுகையிட்டு அனைவருக்கும் முழு அளவில் வெள்ளநிவாரணம் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக பெரியகாட்டுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் தங்கமணியிடம் கேட்டபோது, முழுமையாக பாதிக்கப்பட்ட 20 பேருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளோம். அரசு சார்பில் முழுமையாக பாதிப்புள்ளானவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், பாதியளவு பாதித்தவர்களுக்கு ரூ.4100-ம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி பெரியக்காட்டுப்பாளயத்தில் மொத்தமுள்ள 920 குடும்ப அட்டை தாரர்களில் 481 குடும்ப அட்டைதாரர்கள் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிராமத்தினர் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கு முழு நிவாரணம் வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

அரசின் முடிவுக்குப் பின்னர்தான் அதுகுறித்து முடிவெடுக்கப்படும். அதுவரை நிவாரணத் தொகை வழங்கவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x