Published : 16 Mar 2021 03:13 AM
Last Updated : 16 Mar 2021 03:13 AM

17 நாட்களில் ரூ.111 கோடியே 20 லட்சம் ரொக்கம், பொருட்கள் பறிமுதல்: ‘சி-விஜில்’ செயலியில் வந்த 695 புகார்கள் மீது நடவடிக்கை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

தமிழகத்தில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.111 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரம் ரொக்கம், தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. ‘சி-விஜில்’ செயலியில் வந்த 695 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் செலவினங்கள் குறித்து தீவிரமாகக் கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 14-ம் தேதி வரை, உரியஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ.29 கோடியே 85 லட்சத்து 44 ஆயிரத்தை பறக்கும்படை,நிலை கண்காணிப்புப் படையினர்பறிமுதல் செய்தனர். ரூ.15 கோடியே 32 லட்சத்து 81 ஆயிரத்தை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுதவிர, ரூ.1 கோடியே28 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.34 லட்சத்து 39 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை மற்றும் கஞ்சா, ரூ.62 கோடியே 5 லட்சத்து 94 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், ரூ.1 கோடியே 17 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி, ரூ.1 கோடியே 15 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான துணிகள் உள்ளிட்டபொருட்கள் என ரூ.111 கோடியே 20லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலானவை கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆவணங்களின்றி பிடிபடும் பணம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால் வருமானவரித் துறையிடம் தகவல் தெரிவிக்கப்படும்.

‘இ-எபிக்’கில் பதிவிறக்கம்

தமிழகத்தில் கடந்த நவம்பரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது, 21 லட்சத்து 38 ஆயிரம் புதிய வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டன. அவர்களுக்கு கைபேசியில் ‘இ-எபிக்’ பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மார்ச் 13, 14 தேதிகளில் சிறப்பு முகாம்கள்நடத்தப்பட்டன. இதில், 1 லட்சத்து46 ஆயிரத்து 16 பேர் பதிவிறக்கம் செய்தனர். புதிய வாக்காளர்களில் 16 லட்சத்து 69 ஆயிரத்து 919 வாக்காளர்களுக்கு விரைவுத் தபால் மூலம் வாக்காளர் அடையாள அட்டை அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 லட்சத்து 69 ஆயிரம் பேருக்கு விரைவில் அனுப்பப்படும்.

‘சி-விஜில்’ செயலியில் புகார்

தேர்தல் தொடர்பான புகார்களை வீடியோ, புகைப்பட ஆதாரத்துடன் தெரிவிக்க உருவாக்கப்பட்ட ‘சி-விஜில்’ செயலியில் இதுவரை 1,120 புகார்கள் வந்துள்ளன. அவற்றின் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு 695 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கரூரில் இருந்து 280 புகார்கள் பெறப்பட்டுள்ளன. பொதுமக்கள், புகைப்படம் மற்றும் வீடியோவை தெளிவாக அனுப்ப வேண்டும். தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 1,324 முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன.

பிரச்சார வாகனங்களைப் பொறுத்தவரை 1,749 வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் சார்பில்அளிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் 455 பேருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் -ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள், முன்னாள் குற்றவாளிகள் 6 ஆயிரத்து 659 பேரிடம் இருந்து உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டுள்ளது. 511 காவல்துறை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 15 ஆயிரத்து 724 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தபால் வாக்கு வசதி பெற 38 ஆயிரத்து 324 மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 11 ஆயிரத்து 738 வாக்காளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். வரும் 16-ம் தேதி வரை அவர்கள் விருப்பம் தெரிவித்து 12-டி படிவம் தரலாம். வேறு மாவட்டத்தில் வாக்கு இருப்பவர்கள் அங்கு சென்றுதான் படிவம் பெற்று வாக்களிக்க முடியும். அதேபோல், அவர்களுக்கான தபால் வாக்குகளைப் பெற வரும் வாக்குப்பதிவு அலுவலர்களே அத்தாட்சி கையொப்பமிடுவார்கள்.

இவ்வாறு சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x