Published : 16 Mar 2021 03:15 AM
Last Updated : 16 Mar 2021 03:15 AM

தொல்லியல் துறை மூலம் பாஜக அரசு கையகப்படுத்திய தி.மலை கோயிலை மீட்டு கொடுத்தவர் கருணாநிதி: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலுக்கு பாஜக வால் ஆபத்து ஏற்பட்டபோது, அதனை தடுத்து நிறுத்தி கோயிலை மீட்டுக் கொடுத்தவர் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி என தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் 3-வது முறையாக போட்டியிட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேற்று பிற்பகல் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான வெற்றி வேலிடம் வேட்பு மனுவை வழங்கினார். பின்னர் அவர், அண்ணாமலையார் கோயில் ராஜ கோபுரம் முன்பு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, “அண்ணாமலையார் கோயில் முன்பாக வாக்கு சேகரிப்பு பணியை தொடங்கி உள்ளேன். அண்ணாமலையார் கோயிலுக்கும் திமுகவுக்கும் நெருங்கிய உறவு உள்ளது. ஆன்மிகம் நிறைந்த கோயிலுக்கு பாஜக ஆட்சியில் ஆபத்து வந்தது. இந்த கோயிலை மத்திய தொல்லியியல் துறை கையகப்படுத்தியது. இதை எதிர்த்து பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அப்போது 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. நாம் நினைக்கும் ஆட்சி புதுடெல்லியில் அமைந்து விட்டால், அண்ணாமலையார் கோயில் மீட்டெடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்படி, புதுடெல்லியில் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி அமைந்தது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அண்ணாமலையார் கோயிலை மீட்டு, பக்தர்களிடம் ஒப்படைத்தார் கருணாநிதி.

அண்ணாமலையார் கோயில் வேண்டாம் என தெரிவித்த பாஜக, திருவண்ணாமலையில் தற்போது போட்டியிடுகிறது. நம் மண்ணுக்கும் பாஜகவுக்கும் என்றைக்கும் ஒத்துவராது. எந்த காலத்திலும் மக்களால் ஏற்று கொள்ள முடியாத கட்சி பாஜக” என்றார்.

திமுகவில் 7 பேர் மனு தாக்கல்

திருவண்ணாமலை மாவட்டத் தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக போட்டியிடுகிறது.

இதில், திருவண்ணாமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, கீழ்பென்னாத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி, செங்கம் தொகுதியில் கிரி, போளூர் தொகுதியில் சேகரன், கலசப்பாக்கம் தொகுதியில் சர வணன், செய்யாறு தொகுதியில் ஜோதி, ஆரணி தொகுதியில் அன்பழகன் ஆகிய 7 பேர் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x