Last Updated : 15 Mar, 2021 04:35 PM

 

Published : 15 Mar 2021 04:35 PM
Last Updated : 15 Mar 2021 04:35 PM

அரசியல் எனது தொழில் அல்ல; கடமை: வேட்புமனுத் தாக்கல் செய்தபின் கமல் பேட்டி

அரசியல் எனது தொழில் அல்ல, கடமை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவையில் இன்று கூறினார்.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், அதன் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். தெற்கு தொகுதி வேட்பாளர்களுக்கான மனுத்தாக்கல், ஓசூர் சாலையில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது.

கமல்ஹாசன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (மார்ச் 15) கோவைக்கு வந்தார். பின்னர், பீளமேடு விமான நிலையத்தில் இருந்து கார் மூலம், மனுத்தாக்கல் மையமான கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்துக்கு வந்தார்.

பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலரான உதவி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் தனது மனுவைத் தாக்கல் செய்தார். இதன்பின், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என உறுதி செய்துவிட்டு, அடுத்தகட்டப் பணிகளை மேற்கொண்டார்.

மனுத்தாக்கலுக்குப் பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "என்னுடைய ஜனநாயகக் கடமையை ஆற்ற இந்தத் தேர்தல் வாய்ப்பு அளித்துள்ளது. பாஜகவை எதிர்கொள்ள எங்களுடைய நேர்மையை வியூகமாக வைத்துள்ளோம்.

எங்களிடம் உள்ள திட்டம் நேர்மை. அதை நம்பி நான் போட்டியிடுகிறேன். கோவை எனக்குப் பிடித்த ஊர். என் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். என் நண்பர்கள் அதிகமாக உள்ளனர். தெற்கு தொகுதியில் மக்களுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

கோவை தெற்கு தொகுதியை முன் மாதிரியான ஒரு தொகுதியாக மாற்ற வேண்டும் என்பது என் எண்ணம். அரசியல் எங்கள் தொழில் அல்ல, அது கடமை" எனக் கூறினார்.

பின்னர் வெளியே வந்த கமல்ஹாசன் காரில் புறப்பட்டுச் சென்றார். இன்று மாலை கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட தேர்முட்டி பகுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கமல் பேசுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x