Published : 15 Mar 2021 02:09 PM
Last Updated : 15 Mar 2021 02:09 PM

நாடாளுமன்றத்தில் அப்பாவின் குரலாக என் குரல் ஒலிக்கும்: விஜய் வசந்த் பேட்டி

சென்னை

நாடாளுமன்றத்தில் அப்பாவின் குரலாக என் குரல் ஒலிக்கும் என்று கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:

''இளம் வயதிலேயே இந்த வாய்ப்பை எப்படிக் கருதுகிறீர்கள்?

என் அப்பாவின் மீது வைத்திருக்கும் மரியாதை காரணமாகவும் தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டும் எனக்கு வாய்ப்பளித்த காங்கிரஸ் தலைமைக்கு நன்றி.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக - காங்கிரஸ் இரண்டும் கிட்டத்தட்ட சம பலத்துடன் இருக்கும் கட்சிகள். வெற்றி யாருக்குக் கிடைக்கும்?

தொகுதியில் என்னுடைய வெற்றி உறுதியாக இருக்கும். கன்னியாகுமரி காங்கிரஸின் கோட்டை. சமீபகாலமாக பாஜக மீது மக்களுக்கு அதிருப்தியும் எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ராகுல் காந்தி வந்துசென்ற பிறகு கன்னியாகுமரியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் இதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். தற்போது உங்கள் முன்னால் உள்ள சவால் என்ன?

இந்தத் தேர்தலே சவாலானதுதான். பொன்னார் இரண்டு முறை அப்பாவை எதிர்த்துப் போட்டியிட்டு, ஒருமுறை வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் தேர்தல் களம் பரபரப்பாகவே இருக்கும். என்றாலும் நான் வெற்றி பெறுவேன் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

எதை முன்னிறுத்தி உங்களுடைய பிரச்சாரம் இருக்கும்?

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் வளர்ச்சித் திட்டங்களையும் உருவாக்குவதிலும் முதலில் கவனம் செலுத்துவேன். கன்னியாகுமரி மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வேன். எப்படி வசந்த குமார் தனது குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்துக்கொண்டே இருந்தாரோ, அதேபோல் கன்னியாகுமரி மக்களுக்காக அப்பாவின் குரலாக என் குரல் ஒலிக்கும்.

அப்பா 'காங்கிரஸில் இருப்பதே பெருமை அதை வளர்ப்பதே கடமை' என்று கட்சியில் இருந்தார். 'உங்களுடன் நான்; உங்களுக்காக நான் என்று மக்கள் சேவையிலும் இருந்தார். அவருடைய அனுபவம் எனக்கு இல்லையென்றாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன்''.

இவ்வாறு விஜய் வசந்த் தெரிவித்தார்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் எச்.வசந்தகுமாரும் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எச்.வசந்தகுமார் வெற்றி பெற்றார். கரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி அவர் உயிரிழந்ததால் இடைத்தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x