Last Updated : 15 Mar, 2021 03:12 AM

 

Published : 15 Mar 2021 03:12 AM
Last Updated : 15 Mar 2021 03:12 AM

சிங்காநல்லூர் தொகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா?

கோவை

கோவை மாநகராட்சியின் 19 வார்டுகள் கொண்ட சிங்காநல்லூர் தொகுதியில் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் அதிக அளவில் அமைந்துள்ளன. ஆவாரம்பாளையம், பீளமேடு, பாப்பநாயக்கன்பாளையம், நவ இந்தியா சாலை, எல்லைத் தோட்டம் சாலை பகுதிகளில் ஜாப் ஆர்டர் அடிப்படையில் இயங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிரைண்டர், மோட்டார், பம்ப்செட் தயாரிப்பு நிறுவனங்கள், பஞ்சாலைகள் அதிக அளவில் உள்ளன. பீளமேடு சர்வதேச விமானநிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் என முக்கியப் பகுதிகளும் இங்குள்ளன.

நாயக்கர், கவுண்டர், தேவாங்கர், குரும்பர் சமூக மக்கள் பெரும்பான்மையாக வசித்தாலும், இதர சமூகத்தைச் சேர்ந்தவர்களும் குறிப்பிட்ட சதவீதம் வசிக்கின்றனர். சிங்காநல்லூர் தொகுதியில் ஆண்கள் 1,60,790 பேர், பெண்கள் 1,62,799 பேர், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் என மொத்தம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 614 வாக்காளர்கள் உள்ளனர்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நா.கார்த்திக் 75,459 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட சிங்கை என்.முத்து 70,279 வாக்குகளும், பாஜக வேட்பாளர் சி.ஆர்.நந்தகுமார் 16,605 வாக்குகளும், மதிமுக வேட்பாளர் அர்ஜுன் ராஜ் 4,354 வாக்குகளும் பெற்றனர்.

பொதுமக்களின் கோரிக்கைகள்

சிங்காநல்லூர் தொகுதி பொதுமக்கள் கூறும்போது, "எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி, தண்ணீர் பந்தல் சாலை ரயில்வே மேம்பாலப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இவற்றை விரைவில் முடிக்க வேண்டும். பீளமேடு, சிங்காநல்லூர், மசக்காளிபாளையம், தண்ணீர் பந்தல், ஆவாரம்பாளையம், நவ இந்தியா, லட்சுமி மில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. ஐந்து வருடங்களாக சாலைகளைச் சீரமைப்பதில் மாநகராட்சி நிர்வாகம் அக்கறை செலுத்தவில்லை. பழுதடைந்த சாலைகளுடன், சாக்கடைக் கால்வாய்களையும் சீரமைக்க வேண்டும்.

தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த, ஒண்டிப்புதூரில் அமைக்கப்பட்டுள்ள நாய்களுக்கான கருத்தடை அறுவைசிகிச்சை மையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

ஒண்டிப்புதூர், திருச்சி சாலை உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நிலுவையில் உள்ளன. இதனால், ஒண்டிப்புதூரில் ரூ.60 கோடியில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்.

சிங்காநல்லூர் தொகுதியை மையப்படுத்தி தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். தொழில்துறையினர் தடையின்றி தொழில்புரியும் வகையில், குறைந்த வட்டியில், எளிதில் வங்கிக் கடனுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவிநாசி சாலையில் பீளமேடு, ஹோப்காலேஜ், நவ இந்தியா, சிங்காநல்லூர் மற்றும் ஒண்டிப்புதூர் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. நெரிசலைச் தவிர்க்க, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அவிநாசி சாலைக்கு மாற்றாக, உட்புறங்களில் உள்ள இணைப்புச் சாலைகளை அகலப்படுத்த வேண்டும். அவிநாசி சாலை மேம்பாலப் பணியை விரைவில் முடிக்க வேண்டும்.

இந்த தொகுதியை மையப்படுத்தி அரசு கல்லூரி தொடங்க வேண்டும். பயனீர் மில் சாலையில், சிஎம்சி காலனியில் உள்ள குடியிருப்புகளை மேம்படுத்த வேண்டும். பீளமேடு-காந்திமாநகர் ரயில்வே மேம்பாலத்தின்கீழ் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும், விமானநிலைய விரிவாக்கப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும், இதற்காக நிலம்அளித்தவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை, விரைவில் வழங்க வேண்டும். பஞ்சாலைகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே, பழுதடைந்த வீீட்டுவசதி வாரியக் குடியிருப்பை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன:

திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் தகவல் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. நா.கார்த்திக் கூறும்போது, ‘‘பீளமேட்டில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. நஞ்சுண்டாபுரத்தின் மேற்குப்புதூர் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் சிற்றணை கட்டப்பட்டுள்ளது. ஒண்டிப்புதூர் மாநகராட்சிப் பள்ளியில் கலையரங்கம் கட்டித் தரப்பட்டது. அதேபோல, சாலைகள், பூங்காக்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புப் பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியால் தீர்க்கப்படாத எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி ரயில்வே பாலம், தண்ணீர் பந்தல் சாலை ரயில்வே பாலம் பணிகள், உழவர் சந்தை அருகே பழுதடைந்த வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளைச் சீரமைத்தல் ஆகியவை, அடுத்து திமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும். விமானநிலைய விரிவாக்கப் பணிகளும் தீவிரப்படுத்தப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x