Last Updated : 14 Mar, 2021 04:06 PM

 

Published : 14 Mar 2021 04:06 PM
Last Updated : 14 Mar 2021 04:06 PM

கருவடிக்குப்பம், லாஸ்பேட்டை பகுதிகளில் ஆளுநர் தமிழிசை ஆய்வு: பொதுமக்கள் சரமாரி புகார்

புதுச்சேரி கருவடிக்குப்பம் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி, லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு பகுதிகளில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அடுக்கடுக்கான புகார்களை ஆளுநரிடம் தெரிவித்தனர்.

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாசு கலந்து வருவதாகவும், லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்புகள் முறையான பராமரிப்பு இல்லாததால் திலமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு புகார்கள் வந்தன.

அதனடிப்படையில், இன்று (மார்ச் 14) ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருவடிக்குப்பம் லட்சுமி நகர் ஐய்யனார் கோயில் வீதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்ய வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த அப்பகுதி மக்கள் ஆளுநருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

தொடர்ந்து, கருவடிக்குப்பம் பகுதியில் குறிப்பாக மேஜர் சரவணன் நகர், மேட்டுத் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, ஓடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மாசு கலந்தும், செம்மண் நிறத்திலும் வருகிறது. இதனால் குடிநீர் பயன்படுத்த முடியவில்லை எனக் கூறி வாட்டர் பாட்டிலில் எடுத்து வந்த குடிநீரை காண்பித்தனர்.

மேலும், குடிநீர் குறிப்பிட்ட நேரத்தைவிட குறைவான நேரமே வழங்கப்படுகிறது. இதனால் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை ஒட்டியுள்ள ஓடையில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனை யாரும் கண்டுகொள்வதில்லை.

அதுபோல் மின்துறை ஊழியர்கள் சிறிய வேலை என்று வந்தாலும் பணம் பெற்றுக்கொண்டுதான் பணியை செய்கின்றனர் என அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர். அவர்களுடைய புகார்களை கேட்டறிந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

தொடர்ந்து, அங்குள்ள ஓடையையும், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியின் உள்ளேயும் சென்று ஆய்வு செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதைத்தொடர்ந்து லாஸ்பேட்டையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு பகுதிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அரசு ஊழியர் குடியிருப்புகளில் வசிப்போர், இங்குள்ள குடியிருப்புகள் கட்டப்பட்டு 40 வருடங்களை கடந்துவிட்டன. 5 நிலைகளாக ஊதிய விகிதத்துக்கு ஏற்றார்போல் குடியிருப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.4,300 முதல் ரூ.16 ஆயிரத்துக்கும் மேல் வீட்டு வாடகைப்படி, உரிமைக்கட்டணமாக மாதம் தோறும் பிடித்தம் செய்யப்பட்ட பின்னரே ஊதியம் வழங்கப்படுகிறது.

ஆனால் குடியிருப்புகளின் பல பகுதிகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. பழைய மின் கட்டமைப்புகளால் பாதுகாப்பற்ற நிலையினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. குடியிருப்புகளை சீரமைக்க போதிய நிதி வழங்காமல், முறையாக பராமரிக்கப்படாததால் மோசமான நிலையில் வசித்து வருகிறோம்.

எனவே அனைவரும் பாதுகாப்பாக வாழ நிதியுதவி அளித்து குடியிருப்புகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இவற்றை கேட்டறிந்த ஆளுநர் தமிழிசை நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து அரசு ஊழியர்கள் குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராஜ்நிவாஸ் வந்தடைந்தார்.

கிரண்பேடியை சாடிய பெண்மணி:

கருவடிக்குப்பத்துக்கு ஆய்வுக்கு வந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சால்வை அணிவித்த பெண்மணி ஒருவர், முன்னாள் ஆளுநர் கிரண்பேடி போல் இல்லாமல், தமிழ் தெரிந்த நீங்கள் மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, தங்கள் பகுதியில் உள்ள குறைகளை ஆளுநரிடம் எடுத்துக் கூறினார்.

.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x